திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடம் : தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை, திமுகவை சாடிய இயக்குநர் பா.ரஞ்சித்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டது உட்பட தொடர்ச்சியான அரசியல் கொலைகள் தமிழகத்தை உலுக்கியது.
சமீபத்தில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பா.ரஞ்சித் கடுமையாக கண்டனம் தெரிவித்து திமுக அரசை சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!
இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:
1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?
2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா?