அண்ண டா..! தம்பி டா..! திடீரென பெருக்கெடுக்கும் பாச மழை! பதவி வந்ததும் ஒட்டிக்கொள்ளும் உறவுகள்..!
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கொரோனா தொற்று காரணமாக மு.க.அழகிரி கலந்துகொள்ளவில்லை. ஆனால், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் அவருடைய மகள் என கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழாவுக்கு வந்த துரை தயாநிதியை ஸ்டாலினுடைய மகன் உதயநிதி கட்டி அணைத்து வரவேற்றார். மு.க.அழகிரியும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போதே, ஸ்டாலின் - அழகிரி இடையே நிலவிய அரசியல் போட்டி முடிவை நோக்கி செல்வதாக கூறப்பட்டது.
இந்த சூழலில் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் மதுரை செல்கிறார். அங்கே, தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய கோவை, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு மே 20, 21 என 2 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார்.
கருணாநிதி உயிருடன் இருந்தபோதே, மு.க.அழகிரி திமுகவில் இருந்து விலக்கப்பட்டார். அதன் பிறகு, மு.க.அழகிரி திமுகவில் சேர்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையே இருந்தது.
ஆனால் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு, மு.க.ஸ்டாலின் ஓரு ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், மு.க.அழகிரி பற்றி கேட்டபோது அவர் எனது அண்ணன் என்று பதில் அளித்தார். இந்த சூழலில் இருவரது சந்திப்பு நிகழ்ந்தால், அது தமிழக அரசியலில் திருப்பு முனைய ஏற்படுத்தக்கூடும்.