"ஒரு வாரத்தில் பரவ வேண்டிய கொரோனோ ஒரே நாளில் பரவ ஏற்பாடு" - ராமதாஸ் சாடல்!

Update: 2021-05-24 03:00 GMT

"தமிழக அரசின் நடவடிக்கை ஒரு வாரத்தில் பரவ வேண்டிய கொரோனோ ஒரே நாளில் பரவி வழிவகுத்தது" என தமிழக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்துவதற்காக வேண்டி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்கின இதனால் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் கடைத்தெரு பகுதிகளில் கூட்டம் அலை மோதியது, சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனர். இதனை குறிப்பிட்டு தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்றைய தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "நாளை முதல் தளர்வில்லா ஊரடங்கு என்பதால் நேற்றும், இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை. அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொத்துக் கொத்தாக கொரோனா பரவுவதற்கே இது வழிவகுக்கும்!

சென்னையிலிருந்தும், பிற நகரங்களிலிருந்தும் 4500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதும், வழக்கமான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டதும் தேவையற்றவை. இவை தமிழகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்து விடும்!

தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்ப்பதற்காகவே கடுமையான ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒரு வாரத்தில் படிப்படியாக பரவ வேண்டிய கொரோனாவை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பரவச் செய்வதற்கான ஏற்பாடுதான். ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது என்பதே உண்மை" என்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Similar News