பேரிடர் காலத்திலும் முதல்வருக்கு காழ்ப்புணர்ச்சியா? - ஸ்டாலினை வெளுத்து வாங்கும் சீமான்!
அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளைப் பந்தாடும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என நம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக அரசு மாநில, மாவட்ட அளவிலான ஆட்சியர், அரசு அலுவலர்களை பணி மாற்றம் செய்து ஆணை வெளியிட்டு வருகிறது. பேரிடர் காலத்தில் அரசு அதிகாரிகளுக்கு இது போன்ற மன உளைச்சலை அரசு தரக்கூடாது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா இரண்டாவது அலைப்பரவலில் இந்தியாவிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகும் முதன்மை மாநிலமாக உருவெடுத்து, கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 36,000 ஆகவும், பலியாவோரின் எண்ணிக்கை 500 ஆகவுமென இதுவரை கண்டிராத பேராபத்தினை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கும் வேளையில் நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்தி மக்கள் உயிரினைக் காக்கவேண்டிய அரசு, ஒவ்வொரு நாளும் உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து பந்தாடி வருவது அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக இருக்கிறது.
குறிப்பாக, சுகாதாரத்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் நிர்வாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை உடனுக்குடன் இடமாற்றம் செய்வதென்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதனை தமிழக அரசு உணரத்தவறியது ஏன் எனத் தெரியவில்லை. மக்களின் உயிர்களைக் பாதுகாப்பதைவிடவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகள் தான் அரசுக்கு முக்கியமாக்கப்படுகிறதோ என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது இம்மாறுதல்கள்" என அரசு அதிகாரிகள் இட மாறுதல் பற்றிய தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில், "கட்சிக்கும், ஆட்சிக்கும் இடைவெளி இருக்க வேண்டும்' என்று கூறிய அண்ணா, மொழிப்போர் களத்தில் மிகக் கடுமையாக நடந்துகொண்ட அதிகாரிகளைக்கூடப் பழிவாங்காமல் சுதந்திரமாக இயங்கவிட்டார். அவர்தம் வழிவந்த இன்றைய தி.மு.க அரசு, பழிவாங்கும் நோக்கோடு அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது.
கொரோனா முதல் அலையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அனுபவமிக்க மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்தப் பதவிகளில் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுவோரை குறைந்தபட்சம் இந்த பெருந்தொற்றின் கொடுங்காலம் முடியும் வரையாவது பணியிட மாற்றம் செய்யாமல் அவர்களை ஊக்குவித்து, அவர்களது முன் அனுபவம் சார்ந்த பணி அலுவல்களைச் சரியாகப் பயன்படுத்தி நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்து மக்கள் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என சீமான் தனது அறிக்கையில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.