பி.எஸ்.பி.பி விவகாரத்தில் பழி வாங்க துடிக்கும் குரல்கள் அதிகம் கேட்கின்றன - இயக்குனர் பேரரசு!
பி.எஸ்.பி.பி பள்ளி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது என திரைப்பட இயக்குநர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார். பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் விவகாரம் சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள். சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது.
இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர். சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக குடுக்கும் குரலில் தாயின்குரல், தந்தையின்குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.
உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகததின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.