"சசிகலா தாய் அல்ல பேய்" என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அ.தி.மு.க கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், "அ.தி.மு.க-வை பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாக்கி போல் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் திகழ்கின்றனர். கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்வி கெளரவமான தோல்வி. இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான தோல்வி தான். அ.தி.மு.க நல்ல தலைமையால் தான் வழிநடத்தப்படுகிறது.
இந்த நேரத்தில் கட்சிக்குள் பிரச்னையை ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்துகொண்டிருக்கிறார். சசிகலாவை ஜெயலலிதாவே நீக்கினார். அ.தி.மு.க வலிமையாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. அதற்கு காரணம் சசிகலா தான். ஜெயலலிதா தனது நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை நம்பினார். ஆனால் சசிகலா அந்த நம்பிக்கைக்கு இணக்கமாக நடக்கவில்லை. துரோகம் தான் செய்தார்.
சசிகலா தன்னை தாய் என்று கூறிக்கொள்கிறார். அ.தி.மு.க-வை பொறுத்தவரை "அவர் தாய் அல்ல, பேய்". இந்த சலசலப்புக்கு அ.தி.மு.க-வினர் அஞ்ச மாட்டார்கள்" என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.