திருவிளையாடல் பட வசனம் போல 'பிரிக்க முடியாதது, தி.மு.க-வும் மின்வெட்டும்' - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கலாய்!

Update: 2021-06-27 15:15 GMT

"திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது, தி.மு.க'வும் மின்வெட்டும்தான்" என முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய நத்தம் விசுவநாதன், ``தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் மின் வெட்டுக்குக் காரணம் அத்துறையைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாததுதான். பிரச்னையைத் தீர்க்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சி வந்தவுடன் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது, தி.மு.க-வும் மின்வெட்டும்தான். தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பராமரிப்புகளை நான்கு தினங்களில் சரி செய்து விடலாம்.

ஆனால் இப்போது தி.மு.க ஆட்சி சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் முன்பு தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு இருந்ததுபோல அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மின்வெட்டுக்கு இன்றைய ஆட்சியில் அணில் என்று சப்பையான காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏழு வருடங்களாக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த எனக்கு மின்வெட்டுக்குக் காரணம் அணில் தான் என்று தெரியவில்லை" என கூறினார்.

Similar News