தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக உயர்வு பெற்றதையடுத்து அடுத்த பா.ஜ.க தலைவராக யார் வருவார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. பிரதமர் மோடி 2வது முறையாக பதவி ஏற்ற பின்னர் மத்திய அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது முதன் முறையாக அமைச்சரவை மாற்றப்படுகிறது. இன்று மாலை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர்.
மத்திய அமைச்சர்களாக 43 பேர் இன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இன்று மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள எம்.பி.க்கள் பிரதமர் இல்லத்திற்கு வருகை புரிந்தனர். இதனை தொடர்ந்து 43 பேர் கொண்ட பெயர் பட்டியல் வெளியானது. அந்த பெயர் பட்டியலில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பெயர் இடம் பெற்றுள்ளது.
தமிழக பா.ஜ.கவை பொறுப்பேற்றதில் இருந்து ஏறுமுகத்தில் எடுத்து சென்றதும், கடந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு எம்.எல்.ஏக்களை தமிழக பா.ஜ.க அடையவும் பெரும் பங்கு வகித்தவர் எல்.முருகன். இந்நிலையில் அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றதை தொடர்ந்து அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில் தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை பா.ஜ.க தலைவராக பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.