கீழடி அகழாய்வுக்கு நிலம் அளித்தவர்களுக்கு பட்டா வழங்க அலைக்கழிக்கும் தி.மு.க அரசு இயந்திரம் !
கீழடி அகழாய்வுக்கு சொந்த நிலத்தை கொடுத்தவர்களுக்குப் பட்டா வழங்க அதிகாரிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதால் நில உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணிக்கென 2019'ல் அந்தக் கிராமத்தை சேர்ந்த சிலர் இலவசமாக நிலங்களை வழங்கினர். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அந்த நிலங்கள் சீரமைக்கப்பட்டு நில உரிமையாளர்களிடமே திரும்ப வழங்கப்பட்டன. நிலம் வழங்கியவர்களுக்குப் பட்டா மாறுதல் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களைப் பெற்று, துரிதமாகச் செய்து தரவேண்டும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அகழாய்வுக்கு நிலம் கொடுத்த கொந்தகையைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன்கள் மனோகரன், கருமுருகேசன், ஆண்டிச்சாமி, முத்துராஜா ஆகியோர் பட்டா மாறுதல் செய்து கொடுப்பதில் தாமதம் செய்து, அவர்களை அலைக்கழிப்பு செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பட்டா கிடைக்காத நில உரிமையாளர்கள் கூறுகையில், "அகழாய்வுக்கு நிலம் கொடுக்க ஒப்பந்தம் செய்தபோது, எங்களுக்கான பட்டா மாறுதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. நாங்கள் 5 ஏக்கர் நிலம் கொடுத்தோம். இருப்பினும், எங்களது ஊரில் குறைவாக நிலம் கொடுத்த சிலருக்கும் பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் துரிதமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டுப் பட்டாவிலுள்ள எங்களுக்கான 5 ஏக்கர் நிலத்தைப் பாகப் பிரிவினை செய்து, தனித்தனியே பட்டா மாறுதல் செய்து கொடுக்கப் பலமுறை முயன்றும் அதிகாரிகள் கேட்கவில்லை" என வேதனையுடன் கூறுகின்றனர்.
முதல்வரை சந்திக்க நேரம் கேட்டும் அவர்களை அதிகாரிகள் சந்திக்க விடாமல் நாங்களே செய்து தருகிறோம் என தடுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.