அச்சத்தில் தமிழக பத்திரிகையாளர்கள், அதிகார மமதையின் உச்சத்தில் அறிவாலயம் - அண்ணாமலை தாக்கு
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தை பற்றி நான் ஏற்கனவே பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், பத்திரிக்கை அறிக்கைகளிலும் குறிப்பிட்டிருந்தேன். ஆளும் கட்சியின் அதிகாரமிக்க குடும்பத்தினருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். ஈசிஆர் சாலை ஜி ஸ்கொயர் சாலை என்ற பெயர் சூட்டி இருக்கலாம் என்றுகூட ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன்.
தமிழகத்திலுள்ள நிலம் மற்றும் மனை விற்பனையாளர்கள் தற்போது எந்த பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாத இருண்ட சூழ்நிலையில் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் தினமும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பத்திரப்பதிவு நடவடிக்கைகள் மட்டும் ஜோராக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம், ஜூனியர் விகடன் பத்திரிகை மீதும் ஊடகவியலாளர்கள் சகோதரர் மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீதும் கூட்டாக ஒரு வழக்கைப் பதிவு செய்கிறது. ஒருவேளை அவர்கள் பத்திரிக்கை தர்மத்தை மறந்து அத்துமீறி இருந்தால் கூட, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனையோ சிவில் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் வேண்டுமென்றே அவர்களை சிக்க வைப்பதற்காக கிரிமினல் வழக்கினை ஜி ஸ்கொயர் நிறுவனம் பதிவு செய்கிறது.
பத்திரிக்கையாளர்கள் எல்லாம் அச்சத்தில், அறிவாலயம் அதிகார மமதையின் உச்சத்தில்!@vikatan @MaridhasAnswers pic.twitter.com/GSzXXsTFw6
— K.Annamalai (@annamalai_k) May 23, 2022
தமிழகத்தின் சாமானிய மக்கள் கொலை களவு அத்துமீறல் போன்ற எந்த நடவடிக்கைக்கும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றாலும், காவல்துறையில் உடனடியாக சி.எஸ்.ஆர் மற்றும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய இயலாது அல்லது மிகுந்த காலதாமதம் ஆகும். இந்நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் புகார் அளித்தவுடன் துரிதமாக செயல்பட்ட தமிழக காவல்துறை இரவு தொடங்குவதற்குள் எடுத்த நடவடிக்கை மின்னல் வேகம். அதிலும் தமிழகத்தில் மிகத்தொன்மையான ஒரு பத்திரிகை நிறுவனம், மற்றும் அதேபோல மக்கள் தொடர்பு மிக்க, ஊடகவியலாளர்கள், என்று தெரிந்திருந்தும் புகாரின் உண்மை தன்மையை அறியாமல் அது குறித்து எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்து, எவரையும் கைது செய்யும் வகையில் வழக்கை அமைத்திருப்பது என்பது பத்திரிக்கைகளை, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயலாகும்.