நிலத்தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. நிர்வாகிகள்!

Update: 2021-03-06 13:57 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நிலத்தகராறில் 2 தி.மு.க. நிர்வாகிகள் பெண்ணை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தெற்கு அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் பாண்டிச்செல்வி என்பவருக்கும் பழனி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்மணி மற்றும் அவருடைய மகனும் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகியுமாகிய நந்தகுமார் என்பவருக்கும் நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பாண்டிச்செல்வி தனக்கு சொந்தமான வீட்டினை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நடப்பதற்கு பாதை இல்லை என்பதால் 4 சென்ட் பட்டா நிலத்தை வாங்கி அதில் பாதி இடத்தில் சாலை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளார்.மீதி இருந்த இடத்தை தமிழ்மணி மற்றும் அவருடைய மகன் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று சாலை அமைக்கும் பணியை பார்வையிட வந்த பாண்டிச்செல்விக்கும் தி.மு.க. நிர்வாகிகள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது தமிழ்மணி மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து பாண்டிச்செல்வியை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் திமுக நிர்வாகிகள் இருவர் பெண்ணை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வினர் ஆட்சியில் இல்லாத போதே இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டு வரும்போது அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Similar News