திருவாரூரை மறந்த கருணாநிதியின் மகன் - பூண்டி கலைவாணன் தகுதியானவரா திருவாரூர் தொகுதிக்கு?

Update: 2021-03-15 10:45 GMT

சட்டமன்ற தேர்தல் களம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் சூடேறிக்கொண்டு வரும் வேளையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வேட்பு மனு தாக்கலில் இறங்கியுள்ளது. இன்னும் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோடிகளை வாரி இறைத்து, அறிவாலய வாசலில் "டிஜிட்டல் கவுண்டவுன்" வைத்து காத்திருக்கும் தி.மு.க'வின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றி பார்க்கலாம். அப்படி என்ன விடியல் தருவார்கள் என.


திருவாரூர் - இந்த ஊரை கிட்டத்தட்ட தி.மு.க'வின் தலைநகர் என்றே கூறலாம், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்த ஊர், கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கையை இங்குள்ள வீதிகளில்தான் துவங்கினார், இன்னமும் தி.மு.க தலைமை எனப்படும் கருணாநிதி குடும்பத்து ஆட்கள் கூட திருவாரூர் அருகிலுள்ள காட்டூரில் அமைந்துள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் முத்துவேலர் சமாதியில் வணங்கிவிட்டுதான் முக்கிய பணிகள் துவங்குவர்.

ஏன் இன்றைக்கு கூட ஸ்டாலின் வேட்புமனு சென்னையில் தாக்கல் செய்துவிட்டு தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும் திருவாரூரில் இருந்துதான் பிரச்சாரத்தை துவங்குகிறார். அப்படிப்பட்ட திருவாரூர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்திற்கு பதவி, புகழ், பேர், பணம் என அனைத்தும் அளித்தது ஆனால் திருவாரூர் நகரத்திற்கு கருணாநிதி குடும்பம் தற்பொழுது கலைவாணன் என்ற வேட்பாளரை அறிவித்துள்ளது.

கலைவாணன் ஏற்கனவே திருவாரூர் எம்.எல்.ஏ, கருணாநிதி இறந்த பிறகு 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் எம்.எல்.ஏ'வாக வென்று வலம் மட்டுமே வருகிறார்.

குறிப்பாக "வலம் மட்டுமே வருகிறார்". ஒரு எம்.எல்.ஏ என்ன செய்ய வேண்டும் என இவருக்கு தெரியுமா? அல்லது தெரியாதா? இல்லை கட்சி தலைமை சொல்லி தரவில்லையா என பூண்டியார் என அழைக்கப்படும் பூண்டி கலைவாணன்'தான் பதில் கூற வேண்டும்.

திருவாரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அறிவிக்கப்பட்ட அரைவட்ட சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் போக்குவரத்து நெரிசலில் அதிருப்தியில் உள்ளனர். நாகை வரை திருவாரூர் வழியாக செல்லும் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால் குண்டும் குழியுமாய் இருக்கும் சாலையால் மக்கள் படாத அவதிகளே கிடையாது.

ஆனால் இந்த சாலையில்தான் பூண்டி கலைவாணனும் தன் சகாக்களுடன் பறந்து கொண்டிருக்கிறார் எந்ந கவலையும் இன்றி ஏனெனில் இன்னோவா, ஃபார்ச்சுனரில் பறக்கும் இவருக்கு மக்கள் படும் அவஸ்தை தெரியவாக போகிறது. பல வெளியூர் பேருந்துகள் விளமலில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலேயே நின்று விடுவதாலும், நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையில் இறக்கிவிடுவதாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் இதை பூண்டியார் கண்டுகொள்வதாக இல்லை. ஆனால் மீண்டும் அவருக்கு தி.மு.க சார்பில் சீட்டு.

பூண்டியார் கோடிக்கணக்கில் செலவு செய்து விட்டார் அதனால் அவருக்கு சீட்டு என உடன்பிறப்புகளே பேசும் அளவிற்கு உள்ளது தி.மு.க வேட்பாளர் நிலை! கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்ய பூண்டியார் என்ன மஹானா? என திருவாரூர்வாசிகளே கேள்வி கேட்கும் அளவிற்கு உள்ளது தி.மு.க வேட்பாளர் நிலை.

கோடிகளில் பணத்தை இறைத்து விட்டு அதை திரும்ப எடுக்க தேர்தலில் நிற்கும் பூண்டியாரை தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் திருவாரூர் மக்களுக்கு தெரியும் என கூறுகின்றனர் மூத்த உடன்பிறப்புகள்.

பார்ப்போம் திருவாரூர் மக்களின் தீர்ப்பு தியாகேசன் தீர்ப்பாக இருக்குமா என?

Similar News