தி.மு.க. ஆட்சியில் ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் - செந்தில் பாலாஜி!

Update: 2021-03-17 11:13 GMT

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு எந்த தடையும் இருக்காது என்றும் மணல் அள்ளுவதை தடுக்கும் அதிகாரிகள் பதவியில் இருக்க மாட்டார்கள் என்றும் கரூர் பொதுக்கூட்டத்தில் செந்தில்பாலாஜி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திராவிட முன்னேற்றக் கழகம் இந்த முறை எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்பதற்காக பல்வேறு வெற்று அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டுள்ளது. அவர்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு உரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தற்போது கரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி "தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் 11 மணிக்கு பதவி ஏற்றால் நீங்கள் 11.05 மணிக்கு மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு மணல் அள்ள சென்று விடலாம் எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். அப்படி மீறி தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள் அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டான்" என்று பேசியுள்ளார்.

ஆற்றில் மணல் அள்ளினால் அது விவசாயத்திற்கும் நீர்வளத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் தி.மு.க. வேட்பாளர் இவ்வாறு பேசியுள்ளது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் இருந்த போது மணல் கொள்ளை காரணமாக ஆற்றில் நீர் வரும் போதெல்லாம் கடைமடை வரை நீர் சென்று சேராமல் இருந்தது. இதனை தடுக்கும் விதமாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ஆற்றில் மணல் அள்ளுவதை தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தது. இதனால் தற்போது விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பயன் அடைந்து உள்ளனர்.

மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஆற்றில் மணல் அள்ளுவதை தொடங்கிவிட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே விவசாயிகள் மீது அக்கறை உள்ள அரசே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Similar News