கன்னியாகுமரியில் சட்டம் மற்றும் நர்சிங் கல்லூரி - எம்.ஆர்.காந்தி உறுதி!

Update: 2021-03-19 04:40 GMT

சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நர்சிங் மற்றும் சட்டக் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்று நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.





கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் எம்.ஆர்.காந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த எம்.ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் நிச்சயம் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தார். தான் சட்டமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்ட உடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என்று அவர் தெரிவித்தார்.

75 வயதான பா.ஜ.க. வேட்பாளராக எம்.ஆர்.காந்தி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னந்தனியாக பா.ஜ.க.விற்கு வாக்கு சேகரித்த தாம் தற்போது ஆலமரமாக மாறியுள்ள பா.ஜ.க.வின் வேட்பாளராக போட்டியிடுவது மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 1980ஆம் ஆண்டு தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 10 பேர் போட்டியிட்டனர். அவர்களில் எம்.ஆர்.காந்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடக்கம், எளிமை என ஊழலற்ற அரசியல்வாதியாக இருக்கும் இவரைப் போன்றவர்கள் தான் மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாகர்கோவில் சட்டமன்ற வேட்பாளராக தன்னை அறிவித்த பிறகு அதனை கொண்டாடும் விதமாக ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்து அவர்களுடன் சேர்ந்து எம்.ஆர்.காந்தியும் உணவருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக மாறியது.

Similar News