கமல்ஹாசனை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி போராட்டம்.!

பொது வாழ்வில் பல தடைகளை கடந்து மிகப்பெரிய இடத்துக்கு வந்த தன்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று கூறுகிறார். இவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையா என கூறியிருந்தார்.

Update: 2021-03-30 12:33 GMT

அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் கோவை, தெற்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றது.

இதனிடையே வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கோவையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக வேட்பாளர் வானதியை எதிர்த்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அவருடன் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார்.


 



இதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கமல், பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடம் மட்டுமே விவாதிப்போம். வானதி சீனிவாசன் போன்ற துக்கடா அரசியல்வாதியுடன் விவாதிக்க எங்கள் கட்சியின் மாணவரணியே போதும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தான் ஒரு குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, பொது வாழ்வில் பல தடைகளை கடந்து மிகப்பெரிய இடத்துக்கு வந்த தன்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று கூறுகிறார். இவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையா என கூறியிருந்தார்.




 


இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணி தலைவரும், தொலைக்காட்சி நடிகையுமான ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.

மேலும், மாவட்ட பிரதிநிதிகள், மாநில பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, கமலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கமல்ஹாசன் திரைப்படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை பிடித்துக்கொண்டே, துப்பட்டா கமல் என்று தங்களது கோஷங்களை தெரிவித்தனர்.

Similar News