தமிழக அரசை மதிக்காத சிமெண்ட் நிறுவனங்கள்.. ஸ்டாலினை விளாசும் அன்புமணி ராமதாஸ்.!
தமிழ்நாட்டில் ஏழைத் தொழிலாளர்களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் துறைகளில் மிகவும் முக்கியமானது கட்டுமானத் தொழில் ஆகும்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டுமானப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அந்த நிறுவனங்களை மயிலிறகால் வருடிக் கொடுப்பதன் மர்மத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் கடந்த சில வாரங்களில் மட்டும் 40% வரை உயர்ந்துள்ளன. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை, இப்போது 41% உயர்ந்து ரூ.520 ஆக உள்ளது. அதேபோல் ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட்டின் விலை 3,400 ரூபாயிலிருந்து ரூ.3900 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லியின் விலை 3,600 ரூபாயிலிருந்து ரூ.4100 ஆகவும் உயர்ந்துள்ளன. எம் - சாண்ட் ஒரு யூனிட் விலை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாகவும், கட்டுமானக் கம்பி ஒரு டன் ரூ. 68 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாகவும், செங்கல் ஒரு லோடு ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ. 24 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சிமெண்ட் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தலைநகர் தில்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.350, ஆந்திரா ரூ.370, தெலுங்கானா ரூ.360, கர்நாடகம் ரூ.380 என்ற விலையில் தான் விற்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மூட்டை சிமெண்ட் 40%க்கும் கூடுதலாக ரூ.520 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற கட்டுமானப் பொருட்களின் விலைகளும் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் 25% வரை குறைவாகவே உள்ளன. தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது தில்லி, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன; அந்த மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிக அளவில் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் கூட தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் அவற்றின் உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு செயற்கையாக விலைகளை உயர்த்தியிருப்பது தான் என்பதில் ஐயமில்லை.