தத்தளிக்கும் சென்னை - புகைப்படங்கள் எடுப்பதில் குறியாக இருக்கும் முதல்வரின் பட்டாளம் !
கனமழையால் தத்தளிக்கும் சென்னையை காப்பாற்ற வழி தெரியாமல் தி.மு.க அரசு திக்கற்று நிற்கிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 25'ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றைய தினம் முதலே மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்தில் தற்பொழுது பெய்யும் மழைக்கு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சிறு மழைக்கே அவதிப்படும் சென்னை இது போன்ற கனமழைக்கு கடும் பாதிப்படைந்துள்ளது. சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஆளும் தி.மு.க அரசோ மழை நீரை வடிய வைக்க வழியின்றி மக்களை தண்ணீரில் தவிக்க விட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லேக் அவென்யூ பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஸ்கூல் ரோடு மழை நீர் சூழ்ந்து ஏரி போல காட்சி அளிக்கிறது. சென்னை திருவொற்றியூர் வெற்றி நகர், பாலாஜி நகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் இன்னும் வடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். 'விடியல்' முதல்வரின் சென்னை கொளத்தூர் செல்வி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வீடுகளுக்குள்ளும் எட்டிபார்த்து இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பரிதவித்து போயிருக்கிறார்கள்.
இதேபோல மந்தைவெளி, கே.கே.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு போன்ற வட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களுக்கு பெரும் துயரை ஏற்படுத்தி வருகிறது. வானிலை அறிக்கைகள் எச்சரித்த போதிலும் தி.மு.க அரசு ஏதும் செய்யாமல் இருந்ததன் விளைவு இன்று மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர், முதல்வரோ அவர்களுக்கு உதவுவதை போன்று நூற்றுக்கணக்கில் புகைப்படங்கள் அனுப்புவதில் குறியாக இருக்கின்றார்.