உதயநிதியை 'உதறல்நிதி'யாக மாற்றிய போஸ்டர்கள் - நடுங்கி தவிக்கும் ஸ்டாலின் குடும்பம்!
உதயநிதியை 'உதறல்நிதி'யாக மாற்றிய போஸ்டர்கள் - நடுங்கி தவிக்கும் ஸ்டாலின் குடும்பம்!
1980'களில் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்போதே தி.மு.க என்றால் அரசியலில் ஒரு புயல். அதன் பொதுக்கூட்டங்களுக்கு சாரை சாரையாக மக்கள் வருவர், சில சமயங்களில் காவல்துறை தடியடி நடத்தும் அளவிற்கு தி.மு.க பேச்சாளர்களின் உரையை கேட்டு கூட்டம் சேரும், இன்னும் சொல்லப்போனால் இன்றைய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், மறைந்த க.சுப்பு மற்றும் சமீபத்தில் மறைந்த ரகுமான்கான் ஆகிய மூவரும் இணைந்து "இடி, மின்னல், மழை" என்ற தலைப்பில் ஊர் ஊராக சென்று உரையாற்றிய கூட்டங்கள் அத்தனைக்கும் ஆளும்கட்சி திணறியது. தி.மு.க மேடைப்பேச்சிற்கு ஆகசிறந்த உதாரணம் இந்த கூட்டங்கள்.
இப்படி பேசி வளர்ந்த தி.மு.க இன்று சில போஸ்டரால் ஆடி போய் இருக்கிறது, அதிலும் குறிப்பாக தி.மு.க-வின் பட்டத்து இளவரசர் உதயநிதியோ இந்த போஸ்டர்கள் மூலம் தி.மு.க-வின் ஆட்சி பீட கனவு உடைந்து சுக்குநூறாக சிதறுவதை கண்டு தூக்கம் தொலைந்து திரிகிறார்.
அப்படி என்ன இருக்கிறது போஸ்டரில்? அரசியல் உலகில் போஸ்டர்கள் சர்வசாதாரணம், குறிப்பாக கண்டன போஸ்டர்கள், எதிரிகளுக்கு சவால் விடும் போஸ்டர்கள், மக்களை கிளர்ச்சயடைய செய்யும் கருத்துக்கள் உடைய போஸ்டர்கள் என விதவிதமான போஸ்டர்களை தமிழக அரசியல் தலைவர்கள் அவர்களது வாழ்விலும், அனுபவத்திலும் நிறைய பார்த்திருப்பார்கள் குறிப்பாக தி.மு.க காணாத எதிர்ப்பு போஸ்டர்களே இருக்காது, அந்தளவிற்கு போஸ்டர் என்பது அரசியலில் சாதாரண நிகழ்வு.
ஆனால் இப்போது சில போஸ்டர்கள் மூலம் தி.மு.க பணத்தை வாரி இறைத்து கட்சி தலைவர் ஸ்டாலினை பெரிய தலைவர் போல கட்டமைத்த பிம்பம் உடைகிறது, மக்கள் மத்தியில் கருணாநிதியின் மகன் என்ற பெயரை வைத்து சுலபமாக நுழைந்த ஸ்டாலினின் சுயரூபங்கள் அப்பட்டமாக தெரிகின்றன.
கோடிகளை கொட்டி, கட்சி நிர்வாகிகளை பணிய வைத்து, விளம்பர படங்களை உருவாக்கி, மீடியாக்களை விலைக்கு வாங்கி, நெறியாளர்களை வளைத்து, இவையெல்லாம் போதாது என பிரசாந்த் கிஷோர் என்னும் வடநாட்டவரை பல கோடிகள் குடுத்து வரவழைத்து ஸ்டாலின் தலைமுடி அமைப்பு முதல் அவரின் நடை உடை பாவனைகளை மாற்றி ஒரு அரசியல் ஆளுமையாக உருவகப்படுத்த முயற்சித்த தி.மு.க-வின் மலையளவு செயல்கள் சில போஸ்டர்கள் மூலம் சுக்குநூறாக உடைவதை கண்டு தூக்கமின்றி தவிக்கின்றது ஸ்டாலினின் குடும்பம்.