தோல்வி பயத்தால் அ.தி.மு.க பெண் கவுன்சிலர் சேலையை பிடித்து இழுத்து, தி.மு.க உடன்பிறப்புகள் அராஜகம் !
ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடந்தபோது பெண் கவுன்சிலர்களை வாக்களிக்கவிடாமல் தி.மு.க'வினர் தடுத்து சேலையைப் பிடித்து இழுத்து அராஜகம்.
தென்காசி மாவட்டம், புளியரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு நேற்று மறைமுகத் தேர்தல் நடந்தது. தேர்தலில் அதிமுக ஆதரவாளரான சரவணன் என்பவரும், தி.மு.க ஆதரவாளரான குருமூர்த்தி என்பவரும் வேட்பாளர்களாக களமிறங்கினர். புளியரை பஞ்சாயத்து வார்டு தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களில் எட்டுப் பேர் அ.தி.மு.க'வைச் சேர்ந்த சரவணனுக்கு ஆதரவாகவும், நான்கு பேர் தி.மு.க'வைச் சேர்ந்த குருமூர்த்திக்கு ஆதரவாகவும் இருந்தார்கள். அதனால் சரவணன் வெற்றிபெறுவது உறுதியானதாக இருந்தது.
ஆனால், மறைமுக வாக்குப்பதிவு நடந்த புளியரை பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் அ.தி.மு.க ஆதரவு கவுன்சிலர்களை நுழையவிடாமல் தி.மு.க'வினர் தடுத்து நிறுத்தியதாகப் புகார் எழுந்தது. அதை அ.தி.மு.க'வினர் தட்டிக் கேட்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்த முயன்றார்கள். அந்த நேரத்தில் அ.தி.மு.க'வைச் சேர்ந்த சரவணனுக்கு ஆதரவாக வாக்களிக்க வந்திருந்த பெண் உறுப்பினரின் சேலையைச் சிலர் பிடித்து இழுத்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டன.
இது தொடர்பாக அ.தி.மு.க'வைச் சேர்ந்த கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ கூறுகையில், "தேர்தல் நேரத்திலும் சரி, இப்போதும் சரி ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்கிறார்கள். நான் பொறுமையாக இருந்து பார்த்தேன். ஆனால், ஒரு பெண்ணின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தி.மு.க'வினர் சேலையைப் பிடித்து இழுத்ததால்தான் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. மானத்தைவிடவும் வேறு என்ன வேண்டியிருக்கிறது?" என கேட்டு போராட்டத்தில் இறங்கினார்கள் அ.தி.மு.க'வினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.