எஸ்'பியா? இல்லை தி.மு.க மாவட்ட செயலாளரா? - கரூர் எஸ்.பி மீது கடுக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் !
கரூர் மாவட்ட எஸ்.பி தி.மு.க மாவட்ட செயலாளர் போல செயல்பட்டு, அ.தி.மு.க'வினர்களை அடித்ததோடு, எங்கமீது பொய்கேஸ் போட துடிக்கிறார். அராஜகம் கட்டவிழுத்துப்பட்டிருக்கிறது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியது பரபரப்பாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராக அ.தி.மு.க சார்பில் தேர்வு செய்யப்பட்ட தானேஷ் என்கிற முத்துக்குமார், கடந்த சட்டன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டதால், தனது 8 வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுடன், கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான 8 வது வார்டு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 9 ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது, கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க வேட்பாளரை விட, தி.மு.க வேட்பாளர் கண்ணையன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில், சுமார் 18,762 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் 8 அ.தி.மு.க உறுப்பினர்களும், 4 தி.மு.க உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில், கூட்டம் ஆரம்பித்து பதினைந்து நிமிடத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என தேர்தல் அதிகாரி வாகனத்தில் வெளியேற முற்பட்டார் .அப்போது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அ.தி.மு.க நிர்வாகிகள், தேர்தல் அதிகாரியும், மாவட்ட திட்ட இயக்குனருமான மந்திராசலம் வாகனத்தை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது, "போலீஸ் அதிகாரியே, 'மேலிடத்தில் இருந்து தகவல் வரணும்'னு வெளிப்படையா சொல்றார். தகவல் வந்ததுக்கு பிறகு, எங்க மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுறதா சொல்றாங்க. நீங்களே திட்ட இயக்குநரோட வாகனத்தை பாருங்க. ஏதாச்சும் சேதாரம் ஆகியிருக்கா?. முழு வீடியோ ஆதாரம் வைத்திருக்கிறோம். மினிட் புத்தகத்துல கையெழுத்து மட்டும் வாங்கிகிட்டு, தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றதா தி.மு.க தலைமை அறிவிக்க சொல்லியிருக்கு. அதனால்தான், திட்ட இயக்குநரே வெளியே போயிருக்கிறார். ஆனால், அவர் வாகனத்தை நாங்க நிறுத்தினதுக்குப் பிறகு, இந்த மாவட்ட எஸ்.பி, தி.மு.க மாவட்ட செயலாளர் போல செயல்பட்டு, அ.தி.மு.கவினர்களை அடித்ததோடு, எங்கமீது பொய்கேஸ் போட துடிக்கிறார். அராஜகம் கட்டவிழுத்துப்பட்டிருக்கிறது" என கூறினார்.