ரயில் பெட்டி போல் தி.மு.கவில் துரைமுருகன், நேரு போன்றோர் கழட்டி விடப்படுகிறார்கள் - முதல்வர் எடப்பாடி!

ரயில் பெட்டி போல் தி.மு.கவில் துரைமுருகன், நேரு போன்றோர் கழட்டி விடப்படுகிறார்கள் - முதல்வர் எடப்பாடி!

Update: 2021-01-01 14:12 GMT

தி.மு.கவில் முக்கிய தலைவர்கள் ஓரம்கட்டப்படுவதை பற்றி முதன்முதலில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "தி.மு.க ஒரு அராஜக கட்சி, ரவுடித்தனம் செய்யும் கட்சி என்பது அத்தனை பேருக்கும் தெரியும்.

எப்படியாவது தில்லுமுல்லு செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று வியூகம் வகுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நாம் எவ்வித இடமும் தராமல் எச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனீர்கள். ஆகி இதுவரை தமிழகத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்?" என தி.மு.க எம்பிக்களை நோக்கி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 

மேலும் தி.மு.க'வையும் அதன் தலைவர்களையும் பற்றி சரமாரியாக தாக்கி உண்மையை பேசிய முதல்வர், "பதவிக்கு வரும் வரை எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ அவ்வளவும் பொய் பேசுவார்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொய் பேசுவதில் மிக வல்லவர். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சொன்னால் அது ஸ்டாலினுக்கு தந்தால் மிகப்பொருத்தமாக இருக்கும்.

ஓட்டலில் ஓசி பிரியாணி சாப்பிட்டுவிட்டு அடிப்பார்கள். அழகு நிலையத்திற்கு சென்று பெண்களை தாக்குவார்கள், ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொள்வார்கள். இவர்கள் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்.

ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப சொந்தங்கள் மட்டுமே இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் ஒருபுறம், உதயநிதி ஒருபுறம், தயாநிதிமாறன் ஒருபுறம், கனிமொழி ஒருபுறம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்" என ஸ்டாலினின் குடும்ப ஆதிக்கத்தை பற்றி பேசினார்.

மேலும் தொடர்ந்த அவர், "ஏன் தி.மு.க'வில் வேறு தலைவர்களே இல்லையா, இங்கே இருக்கின்ற கே.என்.நேருவை கழட்டி விட்டார்கள், ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக கழட்டிவிடுவார்களே அதுபோல தி.மு.க'வின் முன்னோடி தலைவர்கள் ஒவ்வொருவராக இப்படி கழட்டி விடப்படுகிறார்கள். இந்த கட்சிக்காக எவ்வளவு நாள் உழைத்திருப்பார்கள். ஏன் துரைமுருகன் போன்றவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாதா?  ஏன் அவர்கள் எல்லாம் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டார்களா? அதனால்தான் உதயநிதி, கனிமொழி போன்ற அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்களா? வரும் தேர்தலில் உங்கள் வாக்குகள் மூலம் வாரிசு அரசியலை ஒழிக்கவேண்டும்" என்றார் அவர்.

இறுதியாக மக்களிடம், "நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்" என அ.தி.மு.க'விற்கு வாக்கு சேகரித்து அவர் பேசினார்.

Similar News