இந்தியாவிலேயே முதன் முறை இப்படி ஒரு நினைவிடமா.. பிரமிக்க வைக்கும் ஜெ.வின் நினைவிடம்.. அடுத்த வாரம் அரசிடம் ஒப்படைப்பு.!

இந்தியாவிலேயே முதன் முறை இப்படி ஒரு நினைவிடமா.. பிரமிக்க வைக்கும் ஜெ.வின் நினைவிடம்.. அடுத்த வாரம் அரசிடம் ஒப்படைப்பு.!

Update: 2020-12-30 07:52 GMT

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இடத்திற்கு அருகாமையிலேயே ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்த பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு, பகலாக ஒப்பந்தக்காரர்களுடன், பொதுப்பணித்துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வந்தது.

கொரோனா மற்றும் மழைக்காரணமாக திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிப்பதில் சற்று காலதாமதம் ஆனது. இருந்தாலும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பணிகளின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வந்தார்.

இந்நிலையில், தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டுமானத்திற்கு உதவிகரமாக இருந்த மரக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப்பகுதி முழுவதும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் நினைவிட வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.

இங்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள், மக்களுக்கு செய்த பணிகள் உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்தில் இந்தப்பணிகள் நிறைவடையும். ஜனவரி முதல் வாரத்தில் நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு நினைவிடங்கள் உள்ளன. இருந்தாலும் நவீன தொழில்நுட்பங்களுடன் நினைவிடம் அமைக்கப்பட்டு, அதில் டிஜிட்டல் முறையில் அவருடைய வாழ்க்கை முறைகள், அவர் செய்த சாதனைகள், தியாகங்கள், மக்களுக்காக உழைத்த பணிகள், வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள், அவர் படித்த நூல்கள் போன்றவை அடங்கிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருவது இதுவே முதன் முறையாகும். இது சென்னைக்கு மேலும் பெருமையை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News