2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்களை தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து விட வேண்டும் என்பதற்காக களப்பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.
ஆனால் பாஜகவை மத்தியில் மறுமுறை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து INDI என்ற கூட்டணியை அமைத்துள்ளது. இதில் தமிழகத்தில் ஆட்சி அமைந்துள்ள திமுக இணைந்து பாஜகவை எதிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் களம் இரு பிரிவுகளாக பிளவு பட்டு சூடு பிடித்து வரும் நிலையில் கடந்த மாதத்தில் நடைபெற்ற ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இந்த மாத தொடக்கத்தில் வந்தது. அதில் மூன்று மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைய காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்தது. அதிலும் காங்கிரசிடம் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டையும் பாஜக தன் ஆட்சியை அமைத்தது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபித்தது.
இப்படி தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் தமிழகத்தில் சமீப காலமாக செய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தமிழக அரசின் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்படும்போது தமிழக முதல்வர் மக்கள் சார்பாக தமிழகத்தில் இல்லாமல் டெல்லிக்கு சென்று கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டது வேறு மக்களை கோபமடைய செய்துள்ளது.
மேலும் மழை வருவதற்கு முன்பு ஒரு பேச்சு! மழை வந்த பிறகு ஒரு பேச்சு என தமிழக அமைச்சர்கள் செய்துவரும் செயல்கள் பல விமர்சனங்களை பெற்றுள்ளது. இதன் மூலம் தற்பொழுது பின்னடைவுகளை சந்தித்துள்ள INDI கூட்டணி மற்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் தோல்வியை சந்திக்க போகிறோம் என பயந்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கூடாது! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ள திருமாவளவன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம் மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த பின்னணியை விசாரித்த பொழுது, தற்பொழுது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்ட காரணத்தினால் ஏதாவது ஒன்றைக் கூற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற போராட்டத்தை திருமாவளவன் அறிவித்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும் தேர்தல் முடிந்த பிறகு வாக்குப்பதிவு எண்ணிக்கையின் போது பின்னடைவு ஏற்படும் சமயத்தில்தான் தான் வாக்குப்பதிவு எந்திரம் முறைகேடு என புகாரை எதிர்க்கட்சியினர் கையில் எடுப்பார்கள்! ஆனால் தற்பொழுது தேர்தலுக்கு முன்பாகவே வாக்குச்சீட்டு எந்திரம் விவகாரத்தை கையில் எடுத்தது INDI கூட்டணிக்கு அவர்களின் தோல்வி தெரிய ஆரம்பித்து விட்டது என்பதற்கான அறிகுறி என விமர்சனங்கள் எழுந்துள்ளது.