மிஸ் இந்தியா பட்டியல் குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கண்டனம்!

மிஸ் இந்தியா பட்டியல் குறித்து ராகுல் காந்தி இட ஒதுக்கீடு அடிப்படையில் கருத்து தெரிவித்துள்ளார்.இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-08-26 16:31 GMT

மிஸ் இந்தியா அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் பட்டியலின பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்கள் இல்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின்  பிரயாக்ராஜில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி பேசிய ராகுல் காந்தி, "மிஸ் இந்தியா அழகி போட்டியில் இதுவரை வெற்றி பெற்ற பெண்களின் பட்டியலை பார்த்தேன். அதில் ஒரு பெண் கூட இதர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் இல்லை. செய்தி ஊடகங்களில் பெரும்பாலான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் இல்லை" என்று பேசினார் .இந்நிலையில் பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

"மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கிறோம் என்பதை ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து பேசுவது நல்ல விஷயமே. பேசுவதற்கு உரிமையையும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த அளவுக்கு  தரம் தாழ்ந்து பேசக்கூடாது. இட ஒதுக்கீடு என்பது மிகவும் முக்கியமான விவாதம். இது தொடர்பான விவாதத்தில் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை சமூக பொருளாதார நிலையில் கை தூக்கி விடுவது தான் இட ஒதுக்கீடு முறை என்பது புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒப்பிட்டு பேசியதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும் கூட உலக அழகி போட்டியில் ரீட்டா ஃபரியா, டயானா ஹைடன் போன்ற சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த இந்திய பெண்கள் வென்றுள்ளனர். உலக அழகி போட்டியில் சீக்கிய பெண்கள் இறுதி சுற்று வரை சென்றுள்ளனர். ஆனால் இட ஒதுக்கீடு விஷயத்தை நீங்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பதுதான் இங்கு மிக பெரிய கேள்வி. இட ஒதுக்கீடு முறையை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது" என்றார்.


SOURCE :News 

Tags:    

Similar News