துண்டு சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாரா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்!
துண்டு சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாரா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்!
எப்போதும் ஊழல், ஊழல் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஊழலுக்குச் சொந்தக்காரர்களே திமுக-வினர்தான். ஊழலின் பிரதிபலிப்பு திமுக. இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசென்றால் அது திமுக அரசுதான். எனவே, எங்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆளுநரிடம் பொய்யான அறிக்கை தயார் செய்து கொடுத்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாலை டெண்டர் ஒன்றை ரத்து செய்துவிட்டார்கள். வருகிற 29ஆம் தேதி தான் அதற்கான டெண்டர் விடப்படும். ஆனால், அதில் ரூபாய் 450 கோடி ஊழல் செய்தார்களென்று எதிர்க்கட்சித் தலைவர், திமுக-வின் தலைவர் பொய் அறிக்கை கொடுத்துள்ளார்.
படித்துப் பார்க்காமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து இந்த ஆட்சி மீது களங்கம் கற்பிக்க வேண்டும், குற்றம் சுமத்த வேண்டுமென்று ஆளுநரிடம் கொடுத்துள்ளார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல அவரால் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கையில் எதுவும் உண்மையில்லை. அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில், 13 திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளை விரைந்து நடத்த ஆணை பிறப்பித்துள்ளது. அதை மறைப்பதற்கு கழக அரசு மீது பல்வேறு குறைகளை சொல்லி பொய்யான அறிக்கை தயார் செய்து எங்கள் மீத அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார் ஸ்டாலின் என்பதை மக்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். எங்களைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
நீங்கள் எந்த இடத்திற்கு அழைத்தாலும் நான் விவாதத்திற்கு வருகிறேன். நீங்கள் துண்டுச் சீட்டில்லாமல் வரவேண்டும், யாராவது எழுதிக் கொடுத்து அதைப் படிக்கக் கூடாது. ஏனென்றால், எழுதிக் கொடுப்பதும் என்னவென்றே தெரியாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் திமுக-வின் தலைவர், அவருக்கு ஒன்றுமே தெரியாது.
கோவை மாநகரத்தில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்பதை ஒரு சீட்டும் இல்லாமல் நான் சொல்கிறேன், உங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம், முடியாது. எனவே, வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தியை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு உண்மை செய்தியை தெரிவியுங்கள். அதனால், எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முடியுமென்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.