தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு: ராமதாஸ் திடுக்கிடும் தகவல்.!
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குடும்பத் தலைவர்கள் பலரை கொரோனா பலி வாங்கி விட்ட நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகளையும் தடுக்கும் வகையில் உயிரிழப்புகளை மறைப்பது கண்டிக்கத்தக்கது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்படுவதாக பா.ம.க. குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குடும்பத் தலைவர்கள் பலரை கொரோனா பலி வாங்கி விட்ட நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகளையும் தடுக்கும் வகையில் உயிரிழப்புகளை மறைப்பது கண்டிக்கத்தக்கது.
கொரோனா உயிரிழப்புகளை தமிழக அரசு திட்டமிட்டே குறைத்துக் காட்டுவதாகவும், உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த மே 15&ஆம் தேதி புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதேபோல், கொரோனாவால் உயிரிழந்த பலருக்கும் அவர்கள் வேறு நோய்களால் உயிரிழந்ததாக தவறான சான்றிதழ் அளிக்கப்படுவதாகவும் கடந்த 4&ஆம் தேதி இன்னொரு அறிக்கையை வெளியிட்டேன். ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐ.சி.எம்.ஆர் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு, அந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மறுத்தது. ஆனால், இப்போது உண்மை அம்பலத்துக்கு வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக அறப்போர் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமக்கள் ஆய்வில் கொரோனா உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் தவறானவை; திரிக்கப்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர், வேலூர் ஆகிய 6 மாநகரங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 11,699 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவமனை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதே காலக்கட்டத்தில் 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 7262-உம், 2020-ஆண்டு உயிரிழப்புகளை விட 8438&உம் அதிகம் ஆகும். அதன்படி பார்த்தால் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 6 மருத்துவமனைகளில் மட்டும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7262 முதல் 8438 வரை இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.