டி.ஜி.பிக்கு மிரட்டல் விடுத்த உதயநிதி.!

டி.ஜி.பிக்கு மிரட்டல் விடுத்த உதயநிதி.!

Update: 2020-11-23 13:48 GMT

ஆட்சியில் இல்லாத போது கூட ஆட்டம் போடும் தி.மு.கவினரின் கட்டப்பஞ்சாயத்து சம்பவங்கள் வாரத்துக்கு ஒரு முறையாவது செய்திகளில் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தாங்கள் தான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இப்போதே தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் துறை அதிகாரி ஒருவருக்கு மிரட்டும் தொனியில் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 21 அன்று மீனவர்கள் அழைப்பு விடுத்ததாக கண் கூறி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பட்டிக்கு உதயநிதி பிரச்சாரம் செய்யச் சென்றார். ஆனால் இந்த பிரச்சாரத்துக்கு முன் அனுமதி எதுவும் பெறாததால் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் உதயநிதியை வழியிலேயே தடுத்து நிறுத்தினார்.

பிரச்சாரத்துக்கு உரிய அனுமதி பெறாத நிலையில் உதயநிதியை அனுமதித்தால் கூட்டம் கூடும் என்றும் பின்னர் அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் டி.ஜி.பி எடுத்துக் கூறியுள்ளார். 

இதனால் சிறிது நேரம் காவல் துறையினருக்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் உதயநிதி, கே.என்.நேயு உள்ளிட்ட சிலரை கைது செய்த காவல் துறையினர் சிறிது நேரத்துக்குப் பின் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து ஒரு கூட்டத்தில் பேசிய உதயநிதி, "எடப்பாடி பழனிச்சாமி அரசு தான் இதை செய்கிறது..இந்த அடிமை அரசு தான்..ஆனால் இதெல்லாம் செய்றவர் ஒருத்தர் இருக்காரு..ஸ்பெஷல் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ்..பேரெல்லாம் நாங்க ஞாபகம் வெச்சுப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல் துறையா? நாங்க பாக்காத காவல் துறையா?" என்று மிரட்டும் விதத்தில் பேசி இருக்கிறார். 

 

 

விதிகளை மீறி கூட்டம் கூட்டிய தன்னை எச்சரித்து கைது செய்ததற்காக ஒரு காவல் துறை உயர் அதிகாரியையே உதயநிதி மேடையில் மிரட்டும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் கைது செய்த காவல் துறை உயரதிகாரி முத்துக்கருப்பனை ஆட்சிக்கு வந்த பின் தி.மு.க என்ன செய்தது என்று நினைவு கூர்ந்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

2006ஆம் ஆண்டு தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகாரி முத்துக் கருப்பன் நான்கு வருடங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டு பல இன்னல்களைச் சந்தித்து அவற்றில் இருந்து மீண்டு இறுதியாக உள்துறை பாதுகாப்பு டி.ஜி.பியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிகாரம் கையில் இல்லாத போதே காவல் துறையை மிரட்டுபவர்கள் ஆட்சிக்கு வந்த பின் காவல் துறையை வைத்து என்னவெல்லாம் செய்வர் என்று மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் வேல் யாத்திரையின் போது காவல் துறையினர் கைது செய்ய வந்த நிலையில், "பிரச்சினை நமக்கும் திராவிட அரசியல்வாதிகளுக்கும் தான்; நமக்கும் காவல்துறைக்கும் அல்ல" என்று கூறி தொண்டர்களை அமைதியாக ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்த பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையுடன் உதயநிதியை ஒப்பிட்டும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News