கொரோனா வைரசுக்கு எதிராக பலனளிக்கும் கபசுரக் குடிநீர்- நாடு முழுவதும் விநியோகிக்க ஆயுஷ் அமைச்சகம் முடிவு.!

Update: 2021-05-08 01:00 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 64 என்ற ஆயுர்வேத மருந்துகளின் கவலையையும் சித்த மருந்தான கபசுர குடிநீரையும் வினியோகிக்க மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே கபசுர குடிநீர் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கபட்டு வரும் நிலையில், ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் கபசுரக் குடிநீர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.








கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது முதலே ஆயுஷ் அமைச்சகம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்தவும், கட்டுக்குள் கொண்டு வரவும் பல்வேறு ஆய்வுகள், முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கென்று ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவையும் ஏற்படுத்தி இருந்தது. ஆயுஷ் அமைச்சகமும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கழகமும் இணைந்து ஆயுஷ் 64 ஆயுர்வேத மருந்துக் கலவை மற்றும் கபசுரக் குடிநீர் எவ்வாறு கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது என்று தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டன.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆயுஷ்-64 மற்றும் கபசுரக் குடிநீர் பாதுகாப்பான மற்றும் சிறந்த மருந்துகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அறிகுறியற்ற, லேசானது முதல் மிதமானது வரையிலான கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகள், பொது சிகிச்சையுடன் ஆயுஷ் 64 மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்வது சிறந்த பலனை வழங்குவதாகவும் எனவே இவை இரண்டையும் எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் இந்த இரண்டு பாரம்பரிய மருந்துகளையும் நாடு முழுவதும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கி கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் ஆயுஷ் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

Source: PIB

Similar News