"தடுப்பூசி விவகாரத்தில் கோவையை புறக்கணிக்கிறது தி.மு.க. அரசு" - தலைவர்கள் குற்றச்சாட்டு..!
தங்களுக்கு வாக்களிக்காத கோவை உட்பட கொங்கு மண்டலத்தின் அனைத்து பகுதிகளையும் தி.மு.க பழிவாங்குகிறது என்றும் இந்த பழி வாங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் #DontBoycottCoimbatore என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூரில் நேற்று மட்டும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3243ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் கோவையில் மட்டும் இதுவரை 29,345 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை அடுத்து தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாவட்டமாக கோவை மாறியுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 5913பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48782 ஆக உள்ளது.
தமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்றால் இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கோயமுத்தூரில் மாநில அரசு மூலமாக ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசியின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று மொத்தம் 172 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கோவையில் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மே-15 முதல் மே-21 வரை மொத்தம் 4714 தடுப்பூசிகள் மட்டுமே தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்டாலும் மே 18 நிலவரப்படி, தமிழ்நாடு மொத்தம் 13,63,494 டோஸ் தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளது. மேலும் மே16 அன்று, மத்திய அரசிடமிருந்து 9,62,000 டோஸ் தடுப்பூசிகளை மாநில அரசு பெற்றிருந்தது.
இதனால் தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு இரண்டாவது அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டத்திற்கு தடுப்பூசி வழங்காமல் இருப்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தி.மு.க அடைந்த படுதோல்விக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் குறைவான தடுப்பூசி போடப்படுவதாகவும் இதனால் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.