ஆப்கன்: காபூல் விமான நிலையத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவு பொருட்கள் !
காபூல் விமான நிலையத்தில் தற்போது 1 பாட்டில் தண்ணீர் ரூ.3,000, சாப்பாடு ரூ.7,500 விற்கப்படுவதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அனைவரும் காபூலில் உள்ள விமான நிலையத்திற்கு படையெடுத்து உள்ளார்கள். எனவே விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக அங்கு விற்கப்படும் பொருட்களின் விலைவாசி உயர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் காபூலில் உள்ள விமான நிலையத்தின் நிலைமை இன்னும் சீராக்கவில்லை. குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எண்ணிலடங்கா மக்கள் கூட்டம் காபூல் விமான நிலையத்தின் அருகில் குவிந்திருக்கும் நிலையில், ஏராளமான மக்கள் தங்களது அடிப்படை தேவையான உணவு மற்றும் தண்ணீருக்காகவும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் காபூல் விமான நிலையத்தில் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் தங்களிடம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அவர் கூறியிருக்கும் தகவலின் படி, ஒரு பாட்டில் தண்ணீர் 40 அமெரிக்க டாலருக்கும், ஒரு தட்டு சாப்பாடு 100 அமெரிக்க டாலருக்கும் விற்கப்படுகிறது. அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி, ஒரு பாட்டில் தண்ணீரின் விலை தோராயமாக ரூ.3000, 1 தட்டு அரிசி சாப்பாடு தோராயமாக ரூ.7,500 ஆகும்.
இதன் மூலம் சாதாரண மக்கள் உயிர்வாழ உதவும் அத்தியாவசிய தேவைகளான தண்ணீரும், உணவும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் படி, ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவர் இந்த விமான நிலையத்தில் அதிக கூட்டம் இருப்பதால், பெண்களும் குழந்தைகளும் பரிதாபமான நிலையில் இருப்பதாக குறிப்பிடுகிறார். எனவே இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் ஆப்கானிஸ்தானின் அப்பாவி மக்களின் உண்மை நிலையை விளக்குகிறது.
Image courtesy:India Today