பேரிடர் மீட்பு நிதி.. ரூ.7,532 கோடியை விடுத்த மத்திய அரசு.. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தெரியுமா?
வடமாநிலங்கள் குறிப்பாக வடமாநில குளிர் பிரதேசமான இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியான மழை நீடித்து வருகிறது. இந்த மழை காரணமாக வெள்ளத்தில் பல்வேறு பகுதிகள் தத்தளித்து வருகிறது. எனவே இத்தகைய மாநிலங்களுக்கு உரிய உதவிகள் உடனடியாக அளிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதி அளித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது மத்திய அரசின் மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பேரிடர் மீட்பு நிதிகளும் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது.
மாநில பேரிடர் மீட்பு நிதிகளுக்காக 22 மாநில அரசுகளுக்கு ரூ.7,532 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை நேற்று விடுவித்தது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு 450 கோடி, ஆந்திரப் பிரதேசத்திற்கு 493.60 கோடி, கர்நாடகாவுக்கு 348.80 கோடி, கேரளாவிற்கு 138.80 கோடி, தெலங்கானாவிற்கு 188.80 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு 180.40 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக, கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தியது குறித்த சான்றிதழுக்கு காத்திருக்காமல், மாநிலங்களுக்கு உடனடியாக நிதியை விடுவிக்கும் வகையில், வழிகாட்டி நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
Input & Image courtesy: News