குழந்தைகளை இழிவாக சித்தரித்து போட்டோ - ட்விட்டர் மீது #POCSO சட்டம் பாய்கிறது!
ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதன் கூடவே தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில், ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதில், ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக குழந்தைகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சைபர் குற்றப் பிரிவின் உயரதிகாரி ஆணையத்தின் முன் ஆஜராகும்படியும் எச்சரித்துள்ளது.
ட்விட்டர் இந்தியா நிறுவனத் தலைவர் மனிஷ் மகேஸ்வரி மீது ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டபாதுகாப்பு அந்தஸ்து விலகிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
சமீபத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, ட்விட்டர் இந்தியா மீது பாயும் 4வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.