ரூ.1,21,300 கோடியில் 12 முக்கியத் திட்டங்கள்.. தமிழ்நாடு உட்பட பயன் பெறும் 10 மாநிலங்கள்..

10 மாநிலங்களில் ரூ.1,21,300 கோடி மதிப்பிலான 12 முக்கியத் திட்டங்களை பிரதமர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-30 05:23 GMT

பிரதமர் நரேந்திர மோடி, பிரகதி எனப்படும் மத்திய – மாநில அரசுகள் தொடர்புடைய திட்டங்களைக் குறித்த காலத்தில் செயல்படுத்துவதற்கான தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்னோக்கு தள 42-வது கலந்துரையாடல் கூட்டத்திற்கு நேற்று தலைமையேற்றார். இந்தக் கூட்டத்தில் 12 முக்கியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இந்த 12 திட்டங்களில் 7 திட்டங்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்ந்ததாகும். ரயில்வே அமைச்சகத்தின் 2 திட்டங்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், எஃகு அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் ஆகியவற்றின் தலா ஒரு திட்டம் இதில் அடங்கும்.


இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.1,21,300 கோடியாகும். இத்திட்டங்கள் தமிழ்நாடு, சத்தீஷ்கர், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்ட்ரா, தெலங்கானா, ஒடிசா, ஹரியானா ஆகிய 10 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்ததாகும். மதுரை, ராஜ்கோட், ஜம்மு, அவந்திப்புரா, பிபிநகர், ரெவாரி, தர்பங்கா ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டங்களில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிரதமர் அறிவுறுத்தினார்.


இந்தக் கலந்துரையாடலின் போது பிரதமரின் ஸ்வநிதி திட்டம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த அனைத்து தகுதி வாய்ந்த சாலையோர வியாபாரிகளை அடையாளம் காணுமாறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை அவர் வலியுறுத்தினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News