இந்தியாவிற்கு சிறந்த அங்கீகாரம் கொடுத்த ஆண்டு 2022: பிரதமர் கூறியது ஏன் தெரியுமா?
இந்தியாவிற்கு மிகச் சிறந்த அங்கீகாரம் கொடுத்த ஆண்டாக 2022 திகழ்வதாக பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
2022ஆம் ஆண்டில் நாட்டுமக்களின் திறமைகள், அவர்களின் ஒத்துழைப்பு, அவர்களின் மனவுறுதி, அவர்களுடைய பரவலான வெற்றிகள் எந்த அளவுக்கு இருந்தன என்றால், இவற்றையெல்லாம் ஒரே மனதின் குரலில் தொகுத்தளிப்பது என்பது கடினமானதாக இருக்கும். 2022ஆம் ஆண்டு என்பது உண்மையிலேயே பல காரணங்களுக்காக மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக அமைந்திருந்தது, அற்புதமானதாக இருந்தது. 2022 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்த ஆண்டாக இருக்கிறது. இந்த ஆண்டிலே, பாரதம் தான் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியது, அமுதகாலமும் தொடங்கியது. இந்த ஆண்டிலே தான் தேசத்தில் புதுவேகம் உருவானது. 2022ஆம் ஆண்டின் பல்வேறு வெற்றிகளும், உலகம் முழுவதிலும் பாரதத்திற்கான ஒரு சிறப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.
2022ஆம் ஆண்டிலே உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் வரிசையில் பாரதம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது. இதே 2022ஆம் ஆண்டிலே தான் பாரதம் 220 கோடி தடுப்பூசிகள் என்ற வியப்பையும் மலைப்பையும் ஒருசேர ஏற்படுத்தக்கூடிய இலக்கைத் தாண்டிச் சாதனை படைத்தது, இந்த 2022ஆம் ஆண்டிலே தான் 400 பில்லியன் டாலர்கள் என்ற மாயாஜால இலக்கை பாரதம் தாண்டி ஆச்சரியமான சாதனையைப் படைத்தது. இதே 2022ஆம் ஆண்டிலே தான் பாரதநாட்டவர் அனைவரும் தற்சார்பு பாரதம் என்ற மனவுறுதியை மேற்கொண்டார்கள், வாழ்ந்தும் காட்டி வருகிறார்கள்.
2022 என்ற இந்த ஆண்டில் தான் இந்தியாவின் முதல் சுதேசி விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் படையில் இணைக்கப்பட்டது, இதே 2022இலே தான் விண்வெளித்துறை, ஆளில்லா வானூர்தி எனும் ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் துறையில் பாரதம் தனது முத்திரையைப் பதித்தது, இந்த 2022ஆம் ஆண்டிலே தான் அனைத்துத் துறைகளிலும் பாரதம் தனது தாங்கும் உறுதியை வெளிப்படுத்தியது. விளையாட்டு மைதானத்திலும் கூட, அது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகட்டும், அல்லது நமது பெண்கள் ஹாக்கி அணியின் வெற்றியாகட்டும், நமது இளைஞர்கள் சிறப்பாக ஆடித் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
Input & Image courtesy: Dinamalar