விண்வெளியில் நாட்டின் பெருமையுடன் இந்தியாவின் G20 தலைமைத்துவம் இசைந்துள்ளது. இந்தியாவின் G20 தலைமைத்துவம் விண்வெளியில் நாட்டின் பெருமையுடன் இசைந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். உலகின் மிக உயர்வான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ள நிலையில், ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. முதல் முறையாக நிலவின் தென்துருவத்தில் இந்தியாவின் கொடி பறக்கும் நேரத்திலும், கொவிட் தடுப்பூசிகளில் முன்னோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வெற்றிக் கதை உட்பட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் சாதனைகள் உலகெங்கிலும் பாராட்டப்பட்டு வரும் நேரத்திலும் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்.
G20 உச்சிமாநாட்டின் கருப்பொருளான 'வசுதைவ குடும்பகம்' என்ற உணர்வுக்கு ஏற்ப "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற பிரதமர் மோடியின் மந்திரத்தை உலகம் இன்று அங்கீகரித்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். புதுதில்லியில் ஜி20 உச்சிமாநாட்டை முன்னிட்டு தூர்தர்ஷனுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது என்றார். விண்வெளித்துறை உட்பட எந்தவொரு எதிர்கால அறிவியல் முயற்சிக்கும், உலகின் அனைத்துக் கூட்டாண்மை நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் விண்வெளித் திட்டம் இப்போது உலகின் முன்னணி விண்வெளி நிறுவனங்களுடன் சமமான வேகத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், நிலவில் முதலில் தரையிறங்கியது நாசாவாக இருக்கலாம், ஆனால் இந்தியாவின் சந்திரயான் -1 தான் சந்திரனில் நீர் மூலக்கூறுகளின் சாத்தியமான ஆதாரங்களைக் கண்டறிந்தது. இப்போது சந்திரயான்-3 முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ளது என்றார்.
இஸ்ரோ 380-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க செயற்கைக்கோள்களை செலுத்தியதன் மூலம் முறையே 250 மில்லியன் யூரோக்கள் மற்றும் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், இந்தியாவின் பேரழிவை சமாளிக்கும் திறன்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக மாறியுள்ளன, அண்டை நாடுகளுக்கும், பேரழிவு தொடர்பான முன்னறிவிப்புகளை நாம் வழங்கி வருகிறோம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Input & Image courtesy: News