பா.ஜ.க. உறுப்பினருக்கு குடும்பத்தினர் வாக்களிக்காதது ஏன்? அடிப்படை அறிவு இல்லாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள்! நடந்த உண்மை இதோ!
bjp candidate local body election;
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் குருடம்பாளைய ஊராட்சி 9வது வார்டுக்கான இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஊராட்சி வார்டுக்கான தேர்தல் என்பதால் வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் அல்லாமல் சுயேச்சை சின்னத்தின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது.
அதன்படி, கட்டில் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தி.மு.கவைச் சேர்ந்த ஆ. அருள்ராஜ் 387 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இதில் கார்த்திக் என்பவர் சுயேட்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு வாக்கை மட்டும் பெற்றுள்ளார். கார்த்திக் கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில், குறிப்பாக ட்விட்டர் தளத்தில் இது குறித்து பெரிய அளவில் கேலிசெய்யப்பட்டு வருகிறது.
ஒரு சில ஊடகங்கள் கார்த்திக்கின் குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தும் ஒருவர்கூட அவருக்கு வாக்களிக்காதது ஏன் என்பது மாதிரி கேள்வி எழுப்பும் தோணியில் செய்தி வெளியிட்டுள்ளன. கார்த்திக் 9வது வார்டில் போட்டியிட்டாலும் அவர் குடியிருப்பது 4வது வார்டில் எனத் தெரியவந்திருக்கிறது. இதனால், அவரோ, அவரது குடும்பத்தினரோ 9வது வார்டில் வாக்களிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை வார்டு தேர்தலில் போட்டியிடுபவர் அவ்வார்டில் வசிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவ்வார்டு அடங்கியுள்ள உள்ளாட்சி பகுதியில் வசிப்பவராகவும், அவ்வுள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் தம் பெயர் இடம் பெற்றுள்ளவராகவும் இருத்தல் அவசியம். அதன்படியே, கார்த்திக் நான்காவது வார்டில் வசித்தாலும் ஒன்பதாம் வார்டு தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.