பெல்ஜியம்: ஆப்கானிய சிறுமியின் உற்சாகம் ததும்பும் புகைப்படம் !
பெல்ஜியத்திற்கு சென்ற பிறகு ஒரு ஆப்கான் சிறுமி உற்சாகத்தில் தாவி செல்லும் ஃபோட்டோ தான் சமுக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பல்வேறு தரப்பு மக்களும் அங்கிருந்த வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். அப்படி நாட்டிலிருந்து தப்பி, பெல்ஜியத்திற்கு சென்ற பிறகு விமானத்தில் இருந்து இறங்கிய ஒரு ஆப்கான் சிறுமி, அந்நாட்டின் ஏர்போர்ட்டினுள் இருக்கும் தார் சாலையில் சாதாரணமாக நடந்து செல்லாமல், உற்சாகத்தில் தனது வயதிற்குரிய விளையாட்டுத்தனத்துடன் தாவி செல்லும் புகைப்படம் தான் உலக மக்கள் அனைவரையும் தற்போது கவர்ந்துள்ளது. இந்த புகைப்படம் அந்த சிறுமி தனது முகத்தில் புன்னகையுடன் இருப்பதை காட்டுகிறது.
அவருக்கு பின்னால் செல்லும் பெண்மணி ஒருவர் முதுகில் லக்கேஜ் பேக் மாட்டி கொண்டு நடந்து செல்கிறார். இருவருக்கு பின்னால் முகத்தில் சிரிப்பு மற்றும் உற்சாகத்தோடு தாவி குதித்து கொண்டே கையில் ஒரு சிறிய பேக்கை எடுத்து கொண்டு பெல்ஜியத்திற்குள் நுழைகிறாள் அந்த சிறுமி. அனேகமாக அந்த சிறுமி ஆப்கானிஸ்தானிலிருந்து நாம் பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்து அத்தகைய விளையாட்டுத்தனமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறாள் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த தனித்துவமான புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்துள்ள முன்னாள் பெல்ஜிய பிரதமர், "அகதிகளை நீங்கள் பாதுகாக்கும் போது இதுதான் நடக்கும், சிறுமியே உன்னை பெல்ஜியத்திற்கு வரவேற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் பெரும்பாலான மக்களின் மனதில் பாதுகாப்பான இடத்தைத் தேடி, நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு நிச்சயம் வரத்தான் செய்யும். அதே உணர்வு தான் அந்தச் சிறுமிக்கு ஏற்பட்டுள்ளது.
Image courtesy:wikipedia