தொடரும் நீட் அரசியல் : ஜீவித் குமாரை உண்மையிலேயே தத்தெடுத்தாரா சபரிமாலா?
தொடரும் நீட் அரசியல் : ஜீவித் குமாரை உண்மையிலேயே தத்தெடுத்தாரா சபரிமாலா?;
தேனியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ஜீவித் குமார் நீட் தேர்வில் 665 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவரது தந்தை ஆடு வளர்ப்பிலும், தாய் 100 வேலைத் திட்டத்திலும் ஈடுபட்டுள்ள நிலையில் ஏழ்மை காரணமாக முதல் முறை அரசு பயிற்சி மையத்தில் பயின்ற போது இவரால் குறைந்த அளவு மதிப்பெண்களே எடுக்க முடிந்தது.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 548 மதிப்பெண்கள் எடுத்ததால் அவர்மீது நம்பிக்கை கொண்ட அவரது பள்ளி ஆசிரியர்கள் இணைந்து நிதி திரட்டி தனியார் கோச்சிங் மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்ததாக பல ஊடகங்களிலும் அவர் தெரிவித்து இருந்தார்.
இதற்கு அனிதா என்ற அரியலூர் மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட போது தனது அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா என்ற ஆசிரியையும் உதவியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆசிரியை சபரிமாலா தான் ஜீவித் குமாருக்கு உதவியது பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். ஒரு முறை தான் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஜீவித் குமாரைப் பார்த்த போதே அவரது திறமையைப் பற்றி தெரிந்து கொண்டு ஊக்கப்படுத்தியதாகக் கூறி இருக்கிறார். இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியிலோ ஜீவித்தின் பள்ளி ஆசிரியர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகக் கூறியுள்ளார்.
தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஜீவித் பற்றிப் பேசி நிதி திரட்டியதாக சபரிமாலா கூறியுள்ளார். ஆனால் மாணவருக்கு பெருமளவு உதவி புரிந்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் அருள் முருகனோ சபரிமாலாவுக்குத் தெரிந்த வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் ₹ 70,000 கொடுத்து உதவியதாகவும் மீதிப் பணத்தை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து திரட்டியதாகவும் கூறியுள்ளார்.