பட்டியலினத்தவர் என்பதால் குடியரசுத் தலைவரையே அடிமை நாய் என்ற தி.மு.க ஆதரவு பத்திரிகையாளர்!

போலி புகைப்படத்தை பகிர்ந்ததோடு குடியரசுத் தலைவரை அடிமை நாய் என்று பதிவிட்ட சவுக்கு சங்கர் மீது பலரும் ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்து வருகின்றனர்;

Update: 2021-01-29 12:22 GMT

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்சை விமர்சிக்கும் போர்வையில் புலனாய்வு பத்திரிகையாளர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் சவுக்கு சங்கர் பலர் மீதும் தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஐ.டி துறை வல்லுநரும் ஸ்டார்ட் அப் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்புவை பிராமணர் என்று கூறி தரம் கெட்ட முறையில் விமர்சித்து நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பின்னர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்ட போதும் அவரது வார்த்தை வன்முறை தொடர்ந்தது. அப்போதே பலரும் அவரது கணக்கை முடக்குமாறு ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது சங்கரின் கீழ்த்தரமான பேச்சுக்களின் புதிய உச்சமாக ஒரு போலியான படத்தைப் பகிர்ந்து நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை "அடிமை நாய்" என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறி குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட போதும் காவல் துறையினர் பொறுமையாக நிலைமையை கையாண்டு வருகின்றனர். எனினும் காவல் துறையினர் விவசாயிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக பல போலி வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் முகர்ஜி நகர் என்ற பகுதியில் சீக்கிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் அவரது மகனும் கடுமையாகத் தாக்கப்பட்டதாக ட்விட்டரில் பதிவிடப்பட்ட பழைய புகைப்படம் ஒன்றை குடியரசுத் தலைவர் "விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும்" என்று கூறியதையும் இணைத்து "இதான் வணக்கமாடா அடிமை நாயே" என்று பதிவிட்டது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எஸ்பி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சவுக்கு சங்கர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இவ்வளவு வன்மத்துடன் பதிவிடும் சங்கரின் ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முன்னர் பிரதமர் மோடி மற்றும் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சங்கர் கீழ்த்தரமான வார்த்தைகளால் இழிவாகப் பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்குப் பிடிக்காதவர்களை சாதிப் பெயர் சொல்லி திட்டுவதும், குறிப்பாக பிராமணர்களைக் குறிவைத்து வரம்பு மீறிப் பேசுவதும் இவரது வழக்கம்.

Similar News