கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும்தானா? இளையராஜா விவகாரத்தில் வெளுத்து வாங்கும் தமிழிசை!

Update: 2022-04-18 01:54 GMT

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.

அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது.

இந்த இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிகொண்டனர். இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள்.

இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இது தொடர்பில், தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இளையராஜாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே " என்று பதிவிட்டுள்ளார்.

Similar News