இந்தியாவின் முப்படையிலும் மகளிர் அக்னி வீரர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!
அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக, பிரதமர் மோடி உரையாற்றினார்.
அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக, பிரதமர் மோடி உரையாற்றினார். குறிப்பாக அக்னி திட்டத்தின் முன்னோடிகளாக திகழும் அக்னி வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம் பெற்று விளங்கும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். அக்னி வீரர்களின் திறனைப் பாராட்டிய அவர், ஆயுதப்படையினரின் துணிச்சலான நடவடிக்கைகள் நமது நாட்டின் தேசிய கொடியை என்றும் உயரப் பறக்கவிடுவதாக குறிப்பிட்டார்.
இந்த வாய்ப்பு மூலம், அவர்கள் பெறும் அனுபவம் வாழ்க்கைக்கான பெருமைமிகு ஆதாரமாக விளங்கும் என்று தெரிவித்தார். புதிய இந்தியா, புதுப்பிக்கப்பட்ட திறனுடன் நிரப்பப்பட்டுள்ளதாகவும், நமது ஆயுதப்படையை வலுப்படுத்துவதுடன், தற்சார்பை அடைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் கூறினார். 21-ம் நூற்றாண்டில் போரிடும் வழிகள் மாற்றம் அடைந்து வருவதாக அவர் கூறினார். நேரடி போர் அல்லாத புதிய சவால்கள் குறித்து விவாதித்த பிரதமர், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட வீரர்கள் நமது ஆயுதப்படையில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று கூறினார்.
குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினர் இந்த திறனை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், வருங்காலத்தில் நமது ஆயுதப்படையில் அக்னி வீரர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார். அக்னி பாத் திட்டம் எவ்வாறு மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் என்பது குறித்தும் பிரதமர் விவாதித்தார். கடற்படையில் இணைந்து பெருமை சேர்த்துள்ள மகளிர் அக்னி வீரர்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், முப்படையிலும் மகளிர் அக்னி வீரர்களை காண்பதை தாம் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார். ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளில் மகளிர் முன்னிலை வகிப்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார். சியாச்சின் பகுதியில் மகளிர் வீரர் பணியமர்த்தப்பட்டது மற்றும் நவீன போர் விமானங்களை மகளிர் ஓட்டுவது ஆகியவற்றை அவர் உதாரணங்களாக குறிப்பிட்டார்.
Input & Image courtesy: News