ஒட்டுமொத்த உலகமும் நமக்கு ஒரே குடும்பம் என புரிய வைத்த மீட்புப் படையினர்: பிரதமர் பெருமிதம்!
துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். வீரர்களின் செயல்பாடுகளைப் பாராட்டிய பிரதமர் உலகம் ஒரு குடும்பகத்தின் கருத்துருவை விளக்கினார். ஒட்டுமொத்த உலகமும் நமக்கு ஒரே குடும்பம் என்ற உணர்வை இந்திய வீரர்கள் துருக்கி மற்றும் சிரியாவில் பிரதிபலித்ததாக பிரதமர் தெரிவித்தார். இயற்கை பேரிடரின் போது உடனடி நிவாரணப் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், துருக்கியில் இந்திய வீரர்களின் மீட்புப் பணிகள் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்ததாகக் குறிப்பிட்டார்.
2001-ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அங்கு தன்னார்வலராக பணியாற்றிய காலத்தைக் குறிப்பிட்டு, இடிபாடுகளை அகற்றி அதற்கு கீழே உள்ளவர்களைக் கண்டறியும் பணியின் சிரமத்தையும், புஜ்ஜில் மருத்துவமனை இடிந்து விழுந்ததால் ஒட்டுமொத்த மருத்துவ அமைப்பு பாதிக்கப்பட்டதையும் கோடிட்டுக் காட்டினார். தமது தேவைகளை நிறைவேற்றும் திறன் மிக்கவர்கள் தன்னிறைவு அடைந்தவர்கள் என்றும் பிறரது தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் பெற்றவர்கள் தன்னலமில்லாதவர்கள் என்றும் அழைக்கப்படுவதாக பிரதமர் கூறினார். இது தனி நபர்களுக்கு மட்டுமல்லாது நாடுகளுக்கும் பொருந்தும் என்றார்.
ஆப்ரேஷன் தோஸ்த் மூலம் மனிதாபிமானத்தை நோக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் உடனடியாக விரைந்து சென்று அங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்ட ஒரு சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிட்டார். பேரிடர் நேரத்தில் நிவாரணம் மற்றும் மீட்புக்கான இந்தியாவின் திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், “உலகின் சிறந்த நிவாரணம் மற்றும் மீட்புக் குழு என்ற அடையாளத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். நாம் எவ்வளவு தயாராக உள்ளோமோ அவ்வளவு சிறப்பாக உலகிற்கு சேவை செய்ய முடியும்”, என்று தெரிவித்தார்.
Input & Image courtesy: News