ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள்.. குஜராத்தில் தொடங்கி வைக்கிறார் பிரதமர்..
குஜராத்தில் பிரதமர் தொடங்கி வைக்கும் நாட்டு நலப்பணி திட்டங்கள்.
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மே 12 இன்று குஜராத் செல்கிறார். காலை 10.30 மணியளவில் காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அதன் பிறகு நண்பகல் 12.00 மணியளவில் ரூ.4,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். பிற்பகல் 3.00 மணியளவில் பிரதமர் ஜி.ஐ.எஃப்.டி நகரம் செல்லவுள்ளார்.
அங்கு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை தொடங்கிவைக்கிறார். காந்தி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியின் போது ரூ.2,450 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். நகர்ப்புற வளர்ச்சித்துறை, நீர் விநியோகத்துறை, சாலை மற்றும் போக்குவரத்துத்துறை, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறையின் திட்டங்கள் இவற்றில் அடங்கும். பனஸ்கந்த் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டங்களை தொடங்கிவைத்தல், அகமதாபாத்தில் ஆற்று மேம்பாலம், நரோடாவில் கழிவுநீர் சேகரிப்பு கட்டமைப்பு, மெஹ்சனா மற்றும் அகமதாபாத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, தாஹேகாமில் அரங்கு உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.
ஜூனாகத் மாவட்டத்தில் பெரிய குழாய் திட்டம், காந்திநகர் மாவட்டத்தில் நீர் விநியோகத் திட்டங்கள், மேம்பாலங்கள் கட்டுமானம், புதிய நீர் விநியோக நிலையம், பல்வேறு நகரத் திட்டச்சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, கட்டி முடிக்கப்பட்டுள்ள சுமார் 19,000 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் வீடுகளின் சாவியை பயனாளிகளிடம் அவர் வழங்கவுள்ளார். சுமார் 1950 கோடி ரூபாய் செலவில் இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News