தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடக பதிவு: 16 பேர் கைது - அசாம் காவல் துறை அதிரடி !
Social media post in support of Taliban: 16 arrested - Assam Police
தாலிபான்களை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மத்திய உளவுத் துறையால் கண்காணிக்கப்படுவர் என தகவல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படி கருத்து தெரிவிப்பவர்கள் நம்மிடையே உள்ளனர், அதிலும் நன்கு சமூகத்தில் அறிமுகமானவர்கள், உயர் பொறுப்பில் வசிப்பவர்கள் இத்தகைய தீவிரவாத கருத்துகளை கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சியும் வெளியானது.
அஸ்ஸாம் போலீஸ் கான்ஸ்டபிள், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் மாநில பிரிவின் மூத்த தலைவர், மருத்துவ மாணவர் மற்றும் பத்திரிகையாளர் உட்பட, ஆப்கானிஸ்தான் தலிபான்களை ஆதரிக்கும் சமூக ஊடக பதிவுகளுக்காக அஸ்ஸாம் காவல்துறையினர் பலரை கைது செய்தனர். தற்போது மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் 23 திங்கள் கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கௌஹாத்தியின், ஜோராபாத் பகுதியில் உள்ள ஒரு டயர் கடையில் வேலை செய்யும் அந்த நபர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக ஒரு பதிவை பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.
இந்த கைதுக்கு முன்பு, அசாம் காவல்துறையினர் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெற்றியைப் பாராட்டி ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட 15 பேரை கைது செய்தனர். ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் கைது செய்யப்பட்டனர்.
கம்ரூப் பெருநகரம், பர்பேட்டா, துப்ரி மற்றும் கரிம்கஞ்ச் மாவட்டங்களில் இருந்து தலா இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தர்ராங், கச்சார், ஹைலகண்டி, தெற்கு சல்மாரா, கோல்பாரா மற்றும் ஹோஜாய் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அசாம் போலீசார் தெரிவித்தனர்.
தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் தலிபான்களுக்கு ஆதரவான கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக அஸ்ஸாம் காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக அசாம் காவல்துறை துணை ஆய்வாளர் ஜெனரல் வயலட் பாருவா முன்பு ட்வீட் செய்திருந்தார். "நாங்கள் அத்தகைய நபர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்கிறோம். இதுபோன்ற ஏதாவது உங்கள் கவனத்திற்கு வந்தால் தயவுசெய்து போலீசாருக்கு தெரியப்படுத்துங்கள், "என்று அவர் மேலும் கூறினார்.