பாதுகாப்பு ஏற்றுமதி மதிப்பு ஆறு மடங்கு அதிகரிப்பு: சாதனை சாத்தியம் ஆனது எப்படி?
பாதுகாப்பு ஏற்றுமதி மதிப்பு 2014-15ல் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
2022 நிதியாண்டில் ரூ.11,607 கோடி, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி மதிப்பு 2014-15ல் இருந்து கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியின் மதிப்பு ஏறக்குறைய ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் மார்ச் 21 வரை ரூ.11,607 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஏற்றுமதிகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசின் சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு கொண்டுவந்த எளிதான நடைமுறைகள் காரணமாகத்தான் இத்தகைய சாதனைகள் சாத்தியமானது என்றும் அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
"2014 முதல் இன்று வரை, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியின் மதிப்பு சுமார் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது" என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் அஜய் பட் அவர்கள் வெள்ளிக்கிழமை மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். 2014-2015 நிதியாண்டில் ரூ.1,941 கோடியாக இருந்த பாதுகாப்பு ஏற்றுமதியின் மதிப்பு, 2021-2022ல் மார்ச் 21 வரை ரூ.11,607 கோடியாக உயர்ந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார். தேசிய பாதுகாப்பு நலன் கருதி பொருட்களின் விவரங்களை பகிர முடியாது என்று அமைச்சர் மேலும் கூறினார். "இந்த காலகட்டத்தில், பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிக்கவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் அரசாங்கத்தால் பல சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
ஆயுதப் பட்டியல் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டாலும், ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராயவும் உலகளாவிய டெண்டர்களில் பங்கேற்கவும் DRDO மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் CMD களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதத் தொழிற்சாலை வாரியம் மற்றும் அதன் 41 தொழிற்சாலைகளை ஏழு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுவதும் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது . 2025 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர்கள் அல்லது ரூ. 36,500 கோடி ஏற்றுமதி இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Input & Image courtesy: Swarajya News