புதிய விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு! வாட்ஸப்புக்கு தடை வருமா?
புதிய விதிமுறைகளின் கீழ் முதன் முதலில் ஒரு தகவலை அனுப்பியவர் யார் என்று அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் ;
இதன் படி அரசின் புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாட்ஸப், டெலிகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இந்தியாவில் இருந்து ஒரு தகவல் முதன்முதலில் அனுப்பப்படவில்லை என்றால் இந்தியாவில் அது யாருக்கு முதன்முதலில் அனுப்பப்பட்டது என்று அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று புதிய விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளனர்.
புதிய விதிமுறைகளின் கீழ் வரும் சமூக ஊடகங்களில் பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸப், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்டவை அடங்கும்.
"இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய, சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை குலைக்கக்கூடிய, அண்டை நாடுகள் உடனான நட்புறவை பாதிக்கக்கூடிய வகையிலான, கற்பழிப்பு, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களை தடுக்கவும் கண்டறியவும் விசாரணைக்கும் தண்டனை வழங்கவும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் சமூக ஊடகங்கள் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு அத்தகைய தகவல்கள் முதன்முதலில் என்று தோன்றின என்ற தகவலை பகிர வேண்டும்" என்று இந்த புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் அரசிடம் அத்தகைய தகவலை பரிமாறும் சூழலில் அந்த தகவலை முதன்முதலில் தோற்றுவித்தவரிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தனிநபர்களின் பிரைவசியை கேள்விக்குறியாக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றத்தை தூண்டக்கூடிய அல்லது குற்றம் பற்றிய தகவல்கள் அடங்கிய முதல் தகவலை பகிர்ந்தவரின் அடையாளத்தை மட்டுமே அரசு கேட்பதாகவும் அவர் என்ன தகவல் பரிமாறினார் என்றோ அல்லது பிற தனிப்பட்ட தகவல்களையோ கேட்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.