இன்று காலை முதலே பா.ஜ.க ஆதரவாளர்கள் தங்கள் முகநூல் கணக்கை திறக்க நூற்றுக்கணக்கான அஞ்சலி பதிவுகள். யாரும் எதிர்பாராத ஒரு களப்போராளி இன்று நம்மை விட்டு விண்ணுலகம் சென்றுள்ளார். யார் இந்த யுவராஜ் பச்சையப்பன்? ஏன் கவனம் பெறுகிறார் இவர்?
இன்று காலை பா.ஜ.க எம்.எல்.ஏ-வும், தேசிய பா.ஜ.க மகளிர் தலைவருமான வானதி சீனிவாசன் அவர்களின் பதிவு இது. அவர் கூறியதை போல, வானதி அவர்களின் நிழலாக வாழ்ந்தவர் யுவராஜ் பச்சையப்பன். "எம் அக்கா" என்ற சொல்லாடல் தமிழக பா.ஜ.க-வினரிடையே மிகப்பிரபலம். கடந்த சில வருடங்களாகவே யுவராஜ் தினமும் காலையில் வானதி அவர்களின் புகைப்படத்துடன் காலை வணக்கம் சொல்ல தவறியதே இல்லை, அப்போது இடம்பெறும் "எம் அக்கா" சொல்லாடல் பின்பு மிகவும் பிரபலமடைந்தது.
இவரின் பின்னனி என்ன? யார் இவர்?
விஜயபாரதம் இதழின் பத்திரிக்கையாளராக இருக்கும் யுவராஜின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் குமார் அவர்களின் இரங்கல் பதிவில் இருந்து நமக்கு தெரிவது, செங்கம் ஊரில் பிறந்து பள்ளி படிப்பை முடித்தவர் யுவராஜ். பள்ளி காலத்திலேயே "இந்தியாவின் பிரதமராக வேண்டும்" என்ற வேட்கை கொண்டு இருந்துள்ளார். பள்ளி பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ் தொடர்பு, ஏ.பி.வி.பி அறிமுகம் என ஹிந்துத்வ பயணத்தை தனது 17-ஆம் வயதிலேயே துவங்கியுள்ளார். அந்த அரசியல் வேட்கை அவரை பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையை நோக்கி அழைத்து வந்தது. முதலில் பச்சையப்பா கல்லூரியில் பி.எஸ்.சி சேர்ந்து இருந்தாலும் பொது வாழ்க்கைக்கு தன்னை அர்பணிக்க துவங்கிய அவருக்கு பல முன்னனி தலைவர்களை போலவே சட்டம் படித்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என விருப்பம் இருந்துள்ளது. சட்டக் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என பி.எஸ்.சி படிப்பை இடையிலேயே கைவிட்டு, சில மாதங்கள் ஆர்.எஸ்.எஸ் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.