அரசுப் பணி ஆசை காட்டி மதம் மாற்றிய பாதிரியார்- திருச்சபை நிர்வாகத்திலும் ஊழல்.!
₹ 34 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரே இரவில் இந்து பெண்ணை கிறிஸ்தவராக மதம்மாற்றி அரசுப் பணியில் அமர வைத்த லுத்தரன் திருச்சபை பிஷப் மீது அச்பையைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். திருச்சபைக்கு ₹.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றை பிஷப்பிடம் இருந்து காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு என்று தென்னிந்தியா முழுவதும் செயல்படுகிறது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த சபைக்கு தற்போது டேனியல் ஜெயராஜ் என்பவர் பிஷப்பாக உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டே அவரது பதவிக் காலம் முடிந்ததும், அதிகபட்ச வயதான 65 வயது ஆன போதும் பதவியை விட்டுக் கொடுக்காமல் ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இவரது செயல்பாடு குறித்து திருச்சபை கவுன்சில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கவுன்சிலைக் கலைத்து விட்டு வயது வரம்பை உயர்த்த திருச்சபை சட்டதிட்டங்களை திருத்த முற்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது இன்னும் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் தனது விசுவாசிகளை முக்கியமான பதவிகளில் அமர வைத்து பிஷப் டேனியல் தனது இஷ்டத்துக்கு செயல்படுவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் ஹேமாவதி என்ற இந்து பெண்ணிடம் ₹34 லட்சம் லஞ்சமாக பெற்றுக் கொண்டு, அவரை ஒரே இரவில் கிறிஸ்தவராக மதம் மாற்றி தஞ்சாவூரில் உள்ள அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியராக நியமித்துள்ளார்.
இதே போன்று லஞ்சம் வாங்கிக் கொண்டு பலரை பணியமர்த்தி இருப்பதாகவும், இது வரை இந்த வகையில் ₹ 25 கோடி வரை அவர் லஞ்சமாகப் பெற்றிருக்கக் கூடும் என்றும் அவர் மீது குற்றம் சுமத்துபவர்கள் கூறுகிறார்கள். இவரைப் பற்றி கல்வித் துறை அதிகாரிகளுக்கும், முதன்மைக் கல்வி அலுவலருக்கும் புகார் அளித்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கல்வித் துறை அதிகாரிகள் பிஷப்பிடம் ₹50,000 லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர் நியமனம் செய்யும் ஆட்களுக்கு அங்கீகாரம் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. லுத்தரன் திருச்சபை 200க்கும் மேற்பட்ட சர்ச்சுக்கள், பள்ளிகள், கல்வியில் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, காப்பகங்கள், அனாதை இல்லங்கள் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது.