இசைக்கடவுளுக்கு இன்று வயது 78!

Update: 2021-06-02 06:00 GMT

இசைக்கடவுள் இளையராஜாவின் 78வது பிறந்தநாள் இன்று. இசையமைப்பாளர் என கூறுவதற்கு மாறாக இசைக்கடவுள் எனக் கூறுவதற்கும் அர்த்தம் உள்ளது.


1975களில் தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர்கள் ஓய்வெடுத்த காலம், தமிழர்களின் செவிப்பசிக்கு வேண்டாத இந்தி திரைப்பட பாடல்களே பெரும்பாலும் உணவளித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது, அகோரப்பசியில் சோறு, பருப்பு சாம்பார், கூட்டு, பொரியல், ரசம், மோர் என எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழன் ஓருவனுக்கு தட்டில் நான்கு சப்பாத்திகளை சில பச்சை மிளகாயுடன் கொஞ்சம் வெங்காயமும் வைத்தால் என்ன பிரதிபலிப்பு இருக்குமோ அப்படி இசை பஞ்சத்தில் இருந்த காலகட்டம். டீ கடை ரேடியோக்கள் ஆகட்டும், கல்யாண, சடங்கு வீடுகளாகட்டும் சம்பிரதாயத்துக்கு சில தமிழ் பாடல்களை ஒலிபரப்பிவிட்டு இந்தி பாடல்களை கொண்ட இசைத்தட்டுகளை கையில் எடுத்த காலகட்டம் அது.

அப்பொழுதுதான் தமிழ் சினிமா'வின் இசை சாம்ராஜ்யத்தை உருவாக்க போகும் நிகழ்வு நடந்தது. பஞ்சு அருணாச்சலம் எனும் திரையுலக படைப்பாளி உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய இளையராஜா'வின் முதல் படமான 'அன்னக்கிளி' வெளிவந்த ஆண்டு அது. இந்தி பாடல்களை அர்த்தம் தெரியாவிட்டாலும் வாயில் வரும் வார்தைகளை போட்டு முணுமுணுத்துகொண்டிருந்த தமிழ் இசை ரசிகர்களை "தாலிலாலிலாலோ......!!!! தாலிலாலிலிலாலோ...!!! என் மச்சானை...!!!!!" என்ற ஒரு பாடல் சுண்டி இழுந்தது.

வாழ்க்கையில் அன்றாடம் கலந்த இசையை அதுவரை அதிகமாக ஈர்க்கவில்லை என்றாலும் இந்தியில் கேட்டு கொண்டிருந்த செவிகளை சற்றே தன் தாய்மொழியில் பாடல்களை கொடுத்து தன் பக்கம் திரும்ப வைத்த 'இளையராஜா'வை "யாருய்யா இது?" என திரும்பி பார்க்க வைத்தார். பின்னாளில் அதே ரசிகர்களை எந்த பாடல் கேட்டாலும் "இது ராசய்யா!" என கூறும் அளவிற்கு தமிழர்களை தன் ராகத்தால் அடிமைப்படுத்தினார்.

70'களில் வாசல் வழியில் கோட்டை உள்ளே நுழைந்தவர் 80'களில் அந்த கோட்டையில் உள்ள சிம்மாசனத்தில் "ராஜா'வாக அமர்ந்தார். சில இசையமைப்பாளர்களை குறிப்பிட அவர்கள் இசையமைத்த படங்களின் பெயர்களை பட்டியலிட்டால் போதும். ஆனால் இவரை பற்றி குறிப்பிட 80'களில் துவக்கம் முதல் 90'களில் இறுதி வரை தமிழ் சினிமாவில் வெளிவந்த 90 சதவிகித படங்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும். அந்த அளவிற்கு இவரின் இசை சாம்ராஜ்யத்தின் படைப்புகளின் பட்டியல் பெரிது.


இவர் இசையமைத்த பாடல்களில் பெலும்பாலும் துவக்க வரியான பல்லவி இவரின் வரிகளாகவே இருக்கும். மேலும் சில பாடலாசிரியர்கள் பாடல் வரிகளில் பாதியில் சிக்கி நிற்கும் பொழுது வரிகளால் அவர்களை தேங்கி நிற்க விடாமல் இளையராஜா இழுத்து கொண்டு சென்றிருப்பார்.

80'களுக்கு பிறகு தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்ப அட்டையில் பெயர் இல்லாத உறுப்பினர் ஒருவராக இந்த 'இசைக்கடவுள் இளையராஜா' வீற்றிருப்பார். குழந்த பிறந்த தாலாட்டு, மழலையின் விளையாட்டு, தாயின் பாசம், தந்தையின் பரிவு, சிறுவர்களின் பரபர விளையாட்டு, பள்ளிப்பருவ காலகட்டம், பருவ வயதினரின் காதல் காலகட்டம், திருமண வைபோபம், குடும்ப கீதங்கள், முதுமையின் தவிப்பு, இறக்கும் தருவாயின் உயிர் முனை போன்ற மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் இந்த இசைஞானியின் படைப்புகளை கடந்து சொல்லாமல் இருக்கவே முடியாது.

இதுபோக மனிதனின் உணர்ச்சிகளான சிரிப்பு, காதல், காமம், ஏக்கம், பரிவு, பாசம், நம்பிக்கை, துரோகம், பயம் போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் இவர் இசை வெளிப்படுத்தும். இவர் பாடல் வரிகளை குறிப்பிட்டு எழுத பக்கங்கள் போதாது.

இவர் 5 தேசிய விருதுகள், பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற அரசின் உயரிய விருதுகள் மட்டுமின்றி சர்வேதேச அளவில் விருதுகள் பல பெற்றிருந்தாலும் 'என் ரசிகர்களின் கைதட்டலே எனக்கு பெரிய விருது' என கூறியவர். திரையுலக இசை மட்டுமின்றி ஆன்மீக இசையும் இவரின் தனிப்பெருமையை பறைசாற்றும். திருவாசகமே அதற்கு முழுச்சான்று.

எத்துனை உயரங்கள் கடந்தாலும், எந்தனை சிகரங்கள் தொட்டாலும் தன் ஆன்மீக ஈடுபாட்டையும், எளிமையையும் கைவிடாத வாழும் சித்தர். பணம், புகழ் என அனைத்தும் காத்து நின்றாலும் தன் அடையாளம் மாறாதவர் இந்த இசை சாம்ராஜ்யம்.


சிந்து பைரவி படத்தில் ஒரு பாடல் வரி வரும், "கவலை ஏதுமில்லை ரசிக்கும் மேட்டுக்குடி! சேரிக்கும் சேர வேண்டும் அதுக்கும் பாட்டுப்படி" என அது போன்றே இவரின் இசைப்பயணம் பட்டி தொட்டி எங்கும் இசை ரசனையை விதைத்தது. இவரின் மொத்த இசை வாழ்வையும் மேற்கூரிய இந்த இரு வரிகள் மூலம் அடக்கிவிடலாம். தமிழர்களின் இசை வாழ்வே வாழ்க பல்லாண்டு!

Similar News