டெல்லி மாநில அரசின் அதிகாரங்களை வரையறுக்கும் G.N.C.T.D மசோதா - தேவை என்ன?
டெல்லி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள GNCTD மசோதா, மார்ச் 17 அன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் (LG) இன் அனுமதி, மேற்பார்வை இல்லாமல் பல முடிவுகளை தன்னிச்சையாக டெல்லி அரசாங்கத்தால் இனி எடுக்க முடியாது.
இது டெல்லியின் நிர்வாக வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவாகும். இது அரசியலமைப்பின் கட்டமைப்பை கணிசமாக மாற்றியமைக்கிறது.
1991 க்கு முன்னர் டெல்லி அரசாங்கத்திற்கு என்ன அதிகாரம் இருந்ததோ, அது தான் தற்பொழுது திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது. 1991க்கு பிறகுதான் டெல்லிக்கு ஒரு சட்டமன்ற அரசாங்கமும் நிர்வாக அதிகாரங்களும் கிடைத்தது. ஆனால் காவல்துறை, சட்ட ஒழுங்கு, நில நிர்வாகம் ஆகியவை மத்திய அரசிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த மசோதாவின் முக்கியமான காரணம் என்ன? ஒரு மாநில அரசின் வரம்பையும் மீறி, நாட்டின் தலைநகராக இருக்கும் டெல்லியை பொறுத்தவரை கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் மேலும் பல இருக்கின்றன.
டெல்லி மூன்றடுக்கு (முனிசிபல், சட்டமன்றம், பாராளுமன்றம்) அரசியல் நிர்வாகங்கள் பெருமளவிற்கு பெரியதா?
டெல்லி 1484 ஸ்கொயர் கிலோமீட்டர்களை கொண்டுள்ளது. இதில் 5 உள்ளூர் அமைப்புகள், அமைச்சரவையை கொண்ட முழு மாநில அரசாங்கம், ஒரு மத்திய அரசாங்கம். இத்தனையும் ஒரு சிறிய வட்டமான டெல்லிக்கு அதிகப்படியாகவே தோன்றுகிறது.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மொத்தம் 342 பேர் இருக்கிறார்கள். இதில் டெல்லியை பிரதிநிதிப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய எம்.பி-க்களும், மாநில எம்.எல்.ஏ-க்களும் கவுன்சிலர்களும் கார்ப்பொரேட்டர்களும் அடக்கம்.